உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படத்தின் பெயர் ‘ரீல்’

0

Loading

ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரீல்’. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். இதை ஏன் கதையாக எழுதி, படமாக்கக் கூடாது என தயாரிப்பாளரிடம் சொன்னேன். அது தான் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது உங்கள் வாழ்வில் நீங்கள் பார்க்கும் பல கதாபாத்திரங்களை உணர்வீர்கள் என்றார் கதாசிரியர் சுராஜ்.

இயக்குனர் முனுசாமி எனக்கு 7 வருட காலமாக நண்பர். அவர் தினமும் எனக்கு தொடர்ந்து ஃபோன் செய்து பேசிக் கொண்டே இருப்பார். நிறைய கதைகள் சொல்வார், நிறைய முயற்சிகள் செய்து கொண்டே இருந்தார். எதுவும் அமையவே இல்லை. 6 மாதத்துக்கு முன்பு ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போகிறேன் என சொல்லி விட்டு போனார். இந்த முறை நிச்சயமாக படம் பண்றோம் என உறுதியாக சொன்னார். படம் கிடைத்தவுடன் புதுமுகங்களை மட்டுமே வைத்து இந்த படத்தை எடுத்தோம். நாயகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் சுனில் பிரேம்.

எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு படக்குழு. எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். நாயகன் எனக்கு டான்ஸ் தெரியாது, பார்த்து பண்ணுங்க என என்னிடம் சொன்னார். ஆனால் படப்பிடிப்புக்கு போன பிறகு நான் என்ன சொன்னாலும் தயங்காமல், அதே எனர்ஜியுடன் செய்தார். இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்துக்கு அமைந்தது வரம் என்றார் நடன இயக்குனர் நோபல்.

இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த போதே முழுக்க முழுக்க புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைத்தேன். முதல் முறை வாய்ப்பு தேடுபவர்களின் வலி எனக்கு தெரியும். இந்த படம் அனைவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் கேப்டன் கருடு.

நான் இளையராஜா சார், ஏஆர் ரகுமான் சாரின் மிக தீவிரமான ரசிகன். சென்னை என்பது முழுக்க இசையால் நிரம்பியது. சென்னை வரும்போதெல்லாம் மனசு லேசாகி விடும். சென்னையில் என் தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் சந்திரன்.

நாயகன் புதுமுகம் என்று சொன்னார்கள், ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஹீரோக்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் ஸ்டண்ட் இயக்குனர்கள் எங்களால் அவர்களை பெரிய ஆக்‌ஷன் ஹீரோ ஆக்க முடியும். அந்த வித்தை எங்களுக்கு தெரியும். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமையை தான் இந்த படத்தில் எடுத்திருக்கிறார்கள். குடிபோதை என்பது நம் சந்ததிகளை அழிக்கும் ஒரு தீய ஆயுதம். காவல்துறையும், ராணுவமும் தான் நம்மை காப்பவர்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும் என்றார் ஜாக்குவார் தங்கம்.

நான் கடந்த 10 வருடங்களாக விநியோகஸ்தராக இருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை எனக்கு தெரியும். படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நல்ல நிறுவனங்களை அணுகி, படத்தை வெளியிட முயற்சி செய்யுங்கள். படத்தின் உரிமைகளை நல்ல விலைக்கு விற்று விடுங்கள். ஏனெனில் இங்கு  தயாரிப்பாளர்களை கைதூக்கி விட யாரும் இல்லை. நம்மால் வளர்ந்த எந்த ஹீரோவும் வரமாட்டார்கள். வியாபாரத்துக்கு ஏற்ப பட்ஜெட்டை முடிவு செய்து படத்தை எடுக்கணும். இயக்குனரை 25 வருடங்களாக எனக்கு தெரியும். அவருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. சினிமா தான் எங்களுக்கு கடவுள். சினிமாவை பற்றி யார் தவறாக பேசினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகப்பெரிய ஆளுமைகள், மனிதர்கள் இருக்கும் சினிமாவில் நானும் ஒரு சினிமாக்காரனாக இருப்பது எனக்கு பெருமை என்றார் நடிகர் ஆர்கே சுரேஷ்.

மலையாளத்தில் ஒரு படமும், சில குறும்படங்களும் நடித்திருக்கிறேன். தமிழில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிய இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி என்றார் நாயகன் உதய்ராஜ்.

சினிமா எடுப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. நிறைய கம்பெனிகள் ஏறி, இறங்கி பல ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். இது ஒரு உண்மைக்கதை, அதற்கேற்ற வகையில் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார் சந்தோஷ். முழுக்க புதுமுகங்கள் பணிபுரிந்த இந்த  படத்துக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்றார் இயக்குனர் முனுசாமி.

இந்த விழாவில் நடிகர் சுரேஷ் பிரேம், கலக்க போவது யாரு சரத், சாகுல், படத்தொகுப்பாளர் சாய் சுரேஷ், விஜய் டிவி சேது, நடிகர் ராஜசிம்மன், ஒளிப்பதிவாளர் வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

 
 
Share.

Comments are closed.