சபரி விமர்சனம்
SABARI review
தன் குழந்தையைக் காப்பாற்ற தன்னந்தனியாக போராடும் ஒரு தாயின் கதைதான் சபரி.
வரலட்சுமி சரத்குமார் – கணேஷ் வெங்கட்ராமன் இருவரும் காதல் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை.
இந்த நிலையில், கணவரின் ‘லீலைகள்’ தெரியவர, அவரைவிட்டு பிரிகிறார் வரலட்சுமி. அதுவரை வசித்து வந்த மும்பாய் நகரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு வந்து வேலைக்கு முயற்சி செய்கிறார்.வேலையோ அவ்வளவு எளிதில் கிடைத்த பாடில்லை.
வரலட்சுமியின் வாழ்க்கை இப்படி போராட்டகரமாக சென்றுகொண்டிருக்க, அவரிடமிருந்து குழந்தையை கடத்த திட்டமிடுகிறார் முன்னாள் கணவர்.
இன்னொரு புறம், மனநலம் பாதித்த – குற்றப் பின்னணி உடைய மைம் கோபி, அந்த குழந்தையை கடத்த முயற்சி செய்கிறார்.
தன் குழந்தையை வரலட்சுமி போராடி காப்பாற்றுவதே கதை.
வரலட்சுமி நடிப்பு அபாரம். கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்பதை அறிந்து பொங்குவதும், தனியாக வாழ்ந்து காட்டுவேன் என்று சவால் விட்டு பிரிவதும், குழந்தையைக் கடத்த ஒரு திட்டம் அரங்கேறுகிறது என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து குழந்தையை காப்பாற்றுவது என அசத்துகிறார் வரலட்சுமி. மொத்தத்தில் ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தன் தலையில் சுமக்கிறார் வரலட்சுமி.
மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் அறிமுக காட்சியிலியே மிரட்டிவிட்டார் மைம் கோபி. கொடூரமாக கொலை செய்வது, குழந்தையை கடத்த திட்டமிடுவது என்று படம் முழுக்க பயமுறுத்துகிறார்.தம் கோபியின் உடல் மொழியும் குரலும் அவர் ஏற்ற பாத்திரத்திற்கு பக்க பலமாக நிற்கின்றன.
வரலட்சுமியின் காதல் கணவராக வரும்கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞராக வரும் ஷசாங்,வரலட்சுமியின் மகளாக வரும் பேபி நிவேக்ஷா என அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ராகுல் ஸ்ரீவத்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு சிறப்புசேர்க்கின்றன.
தன் குழந்தையை காக்க போராடும் ஒரு பெண்ணைப் பற்றிய படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அனில் கட்ஸ். இது பெண்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளதை பாராட்டலாம்.