![]()
மெட்ராஸ் என்ட்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் ‘96’ படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலரும் இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன.
விஜய் சேதுபதியின் ஆரம்ப கால வெற்றிப் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதல் முறையாக த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கலை இயக்குநர், “நான் 12-ம் வகுப்பு படிக்கும்போதுதான் ‘மெளனம் பேசியதே’ படம் வெளியானது. அப்போதே த்ரிஷாவைப் பார்த்து, நானும் எனது நண்பர்களும் “எனக்குத்தான்.. எனக்குத்தான்…” என்று சொந்தம் கொண்டாடினோம். ஆனால், இன்று த்ரிஷா நடித்த படத்தில் படத்தில் நான் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..” என்றார்.
இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா பேசும்போது, “நான் த்ரிஷாவின் தீவிர ரசிகன். ரீரெக்கார்டிங்கின்போது அவரை திரையில் பார்த்தபோது இசையமைப்பதைக் காட்டிலும், அவரை ரசிப்பதில்தான் ஆர்வமாக இருந்தேன்…” என்றார்.
நாயகி த்ரிஷா பேசும்போது, “இந்தப் படம் ஒரு ஹீரோயினுக்காகவே எழுதப்பட்ட படம். நான் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடிக்கவில்லை. அவர் கேஷூவலாக நடித்திருக்கிறார்…” என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி பேசியபோது, “த்ரிஷாவை எல்லோரும் ‘சீனியர்’ என்கிறார்கள். பொதுவாக ஹீரோயின்கள் சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்து விடுவார்கள். அதுபோல்தான் த்ரிஷாவும் எனக்கு முன்பாகவே சினிமாவுலகத்துக்கு வந்துவிட்டார். ஆனால், த்ரிஷா என்னைவிட ஏழு வருடங்களாகவது இளையவராக இருப்பார். த்ரிஷாவை பார்த்தால் சின்ன வயசில் இருந்து எனக்கு பயம். நான் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றால் என் அம்மா த்ரிஷாவை காட்டிதான் பயமுறுத்துவார்கள்.
த்ரிஷா, தமன்னா, நயன்தாரா மூவருடனும் நடித்தபோதுதான் அவர்களின் டெடிகேஷன், உழைப்பு பற்றித் தெரிந்தது. அதனால் இந்த மூன்று பேரும் இன்றைக்கும் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் இயக்குநர் பிரேம் மூலம்தான் தொடங்கப்பட்டது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க…’ என்று சொல்லியிருந்தேன். அதேபோல இந்த ‘96’ படத்துக்கும் என்னால சொல்ல முடியலை. ஏனென்றால், இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அப்படியாகிவிட்டது. இதுவே என்னை இப்போது பயமுறுத்துகிறது.
இந்தக் கதை ஒரே இரவில் நடந்து முடியும் கதை. படம் பார்ப்பவர்களையும் அவர்களது பழைய பள்ளிக் கால நினைவுகளை அசை போட வைக்கும். ” என்றார் விஜய் சேதுபதி.
மேலும் தொடர்ந்து நடந்த கேள்வி பதில் ஷெசனில், தனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை அல்ல என விளக்கமளித்தார் விஜய் சேதுபதி.
இது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “எனது வீட்டில் நடந்தது சோதனையே இல்லை. அதுவொரு சாதாரண சர்வேதான் என்று வருமான வரித் துறை அதிகாரிகளே கூறினார்கள். வருமான வரித் துறையில் சர்வே என ஒன்றிருப்பது குறித்து எனக்கே இப்போதுதான் தெரியும். கடந்த மூன்று வருடங்களாக அட்வான்ஸ் டேக்ஸ் நான் கட்டி வருகிறேன். ஆனால் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. எனது ஆடிட்டர் திடீரென போய் ரிட்டன் தாக்கல் செய்ததால், வருமான வரித் துறையினர் வீடு தேடி வந்துவிட்டனர். இதுதான் நடந்தது. அதற்குள் ஐடி ரெய்டு என தகவல் பரவிவிட்டது. அதுவும் ஒரு பப்ளிசிட்டிதான். பொதுவாக தவறான செய்திகள்தான் வேகமாக பரவும். நாம் காசு கொடுத்தால்கூட அது கிடைக்காது” என்று விஜய் சேதுபதி சொல்ல அரங்கமே கலகலப்பானது.

