இராமநாதபுரம், மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் ஓம் பிரகாஷ்மீனா. அம்மா அவர்களின் ஆசியுடன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (PSO) எனக்கு பாதுகாப்பு அளிக்க அம்மா உத்தரவிட்டார். அதன் பிறகு தொகுதிக்குச் செல்லும் போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் அம்மா உத்தரவின் பேரில் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனை அச்சமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த உயர் திரு. மணிவண்ணன் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தார். அவர் மாறுதலுக்குப் பிறகு அமைச்சர் மணிகண்டன் சிபாரிசில் வந்த ஓம் பிரகாஷ் மீனா, எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன், உளவுத்துறை ஆய்வாளர் மாரியப்பன், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான் பிரிட்டோ (SP INSPECTOR) ஆகியோரிடம் பல முறை வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக முறையிட்டுள்ளோம்.
ஆனாலும் இவர் பதவியேற்ற பிறகு கடந்த ஓராண்டாக (தேவர் ஜெயந்தி உட்பட) நான் மாவட்டத்தில் வருகை தந்தபோது ஒரே ஒரு முறையும், என்னிடம் கடிதம் வாங்கிக் கொண்டு ஒரே ஒரு முறையும், கடைசியாக 23.4.2018 அன்று எனது தொகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க கொரிய நாட்டு அறிஞர்களை அழைத்து வந்ததால், வெளிநாட்டவர் வரும் சூழலில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற கூடாது என்பதால் பாதுகாப்பிற்காக ஒரு போலீஸ் வாகனத்தில் ஐந்து பேரை அனுப்பி வைத்தனர். இதற்கு முன்பாக தொகுதிக்கு நான் வந்தபோது, பாதுகாப்பு கேட்டு ஆய்வாளர் (தனிப்பிரிவு) ஜான்பிரிட்டோவிடம் பேசியபோது, “வந்தால் வரட்டும்” என மிகச் சாதாரணமாக பதில் பேசினார். எஸ்.பி. எனக்கு PSO கொடுத்துள்ளதாக பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்துள்ளார், ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து, அம்மா இருக்கும்போது கொடுத்த PSOவை எஸ்.பி., கொடுத்தது போல் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக கடந்த 25.2.2017 அன்று திருவாடானையில் எனக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அச்சமயம் அவர்களை போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அப்பகுதியை நான் கடக்கும் போது பாட்டில் மற்றும் கல்வீச்சு நடைபெற்றது. இது தொடர்பாக திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19.3.2017 அன்று சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகள் வெளிவந்தது தொடர்பாகவும் எனக்கு இரவில், சிலர் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 21.11.2017 அன்று எஸ்பியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான் பிரிட்டோவிடம் எனது சார்பாக எனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி வழக்கறிஞர் பாலா, எனது உதவியாளர் செல்வேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், இக்காலகட்டங்களில் தொகுதி மக்கள் மற்றும் எனது உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள பல முறை வந்துள்ளேன். அச்சமயங்களில் கூட எனக்கு பாதுகாப்பு காவல்துறை நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை. இது போன்று தொடர் நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே எஸ்.பி. கூறிய அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவையே. மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன். எனது பாதுகாப்பிற்கு புலிப்படை நிர்வாகிகள், தொண்டர்கள் போதும். ஆனால் என்னால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதால் நான் போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறேன்.