தேறுமா கார்த்தியின் தேவ் படம்

0

Loading

கடைக்குட்டி சிங்கம் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நடிக்கவிருக்கும் பதினேழாவது படம் என்ற அறிவிப்புடன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட படத்துக்கு இப்போது தேவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சி்ங்கம் 2 படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் குமார் தயாரிக்கும் படம் இது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் ஊடகங்களுக்கு அனுப்பபட்ட செய்தியை அப்படியே கீழே தருகிறோம்…
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ் , ஒளிப்பதிவு : வேல்ராஜ் , ஸ்டண்ட் : அன்பரீவ் , எடிட்டிங் : ரூபன்.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும் என்று தன் செய்திக் குறிப்பில் குறிப்பிடுகிறது படத்தைத் தயாரிக்கும் நிறுவனம். கார்த்தி என்னவோ பருத்தி வீரனைப்போல உள்டிராயர் தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டுதான் எல்லாப் படங்களிலும் நடித்து வருவதைப்போலவும் தேவ் படத்தில்தான் ஸ்டைலிஷான லுக்கிலும் மாஸான தோற்றத்தில் வருவதுபோலவும் இருக்கிறது இந்த செய்தி.

அதுசரி… கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் என்ன கண்றாவதி புதுமையாக இருக்கும் என்பதை நினைத்தால் இப்போதே பயமாக இருக்கிறது.
சிங்கம் 2 படத்தை ஒரு மொழியில் தயாரித்து மற்றொரு மொழியில் டப் செய்து இருமொழிப்படம் என்பதுபோல் விளம்பரப்படுத்தி கல்லா கட்ட முயன்ற நிறுவனம்தான் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ்.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது என்றும், சென்னையில் விரைவில் துவங்க உள்ளது என்றும் அடுத்தகட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில்  அழகான லொகேஷனில்  படமாக்கப்படவுள்ளது என்றும் ஐரோப்பாவையும் விடாமல் படப்பிடிப்பு நடத்தப்  போகிறோம் என்றெல்லாம் தயாரிப்பாளர் அள்ளிவிடுவதைப் பார்த்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இன்னும் படப்பிடிப்பே முடியாத படத்தை ஐம்பத்தைந்து கோடி பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருப்பதாக வேறு கூறியிருக்கிறார் -அதுவம் எந்த சமரசமில்லாமலும்.
நாகார்ஜுன் நாயகனாகவம் கார்த்தி முக்கிய வேடத்திலும் நடித்த தோழன் படத்தை இருமொழிப்படம் என்று கல்லா கட்டியதைப்போல் கார்த்தியே முழு பாரத்தையும் சுமக்கும் தேவ் படம் தயாரிப்பாளர் தரப்பின் பணப்பசிக்கு ஈடு கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Share.

Comments are closed.