மலேஷியாவில் வசிக்கும் தோட்டத் தமிழர்களின் வாழ்வை விவரிக்கும் தோட்டம் என்ற திரைப்படம் சமீபத்தில் சென்னையில் பிரத்யேகக் காட்சியாகத் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இந்தப் படம் தங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பை விவரித்ததுடன் படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் பங்கு பெற்ற தொழில் நுட்பக் கலைஞர்களைப் பாராட்டப் பேசினர்.
மலேஷியா என்றாலே நமக்கு விண்ணைத் தொட முயற்சிக்கும் கட்டிடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அது மட்டுமல்ல மலேஷியா என்பதையும், தலைமுறை தலைமுறையாய் அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்களின் வாழ்வையும் இந்தப்படம் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.
அன்றைய தினம் தன் மனைவியின் பிறந்த நாள் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குநர் சீனு ராமசாமி, துவக்கத்திலிருந்து முழு படத்தையும் பார்த்ததுடன், பங்கு பெற்ற கலைஞர்களையும் பாராட்டிவிட்டு சென்றதிலிருந்தே படம் எந்த அளவுக்கு அவரைக் கவர்ந்திருக்கும் என்பதை புரிநது கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆரி, படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பாராட்டியதுடன், மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் அழகாக விவரித்தார்.
மலேஷியத் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவரான அரங்கண்ணல் ராஜு இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். அதனால்தான் இந்த அளவுக்கு யதார்த்மாக இந்தப் படத்தை உருவாக்க இவரால் முடிந்திருக்கிறது.
சிங்கை ஜெகன், கே.எஸ்.மணியம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
சதீஷ் பி. சரண் ஒளிப்பதிவு எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நம் கண் முன் சம்பவங்கள் நடப்பதைப்போல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது.
அமரர்கள் நா. முத்துகுமார் மற்றும் அண்ணாமலை ஆகியோரின் பாடல்களுக்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாய்.
அடிதடி ஆக்ஷன் மசாலாக்களையும், காமநெடி காமெடிகளையும் பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு இந்தப் படம் நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சர்வதேசப் படவிழாக்களுக்கு தோட்டம் படத்தை அனுப்புவதோடு நின்று விடாமல், தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர் வசிக்கும் இடங்களிலெல்லாம் மெயின் ஸ்ட்ரீம் படங்கள் திரையிடும் அரங்குகளில் இந்தப் படத்தைத் திரையிட வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்.