‘கோவா’ படத்தின் ‘இதுவரை இல்லாத’ என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
“என்னை முதல் முதலாக ஒரு பாடகராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யுவன் சாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை போன்ற இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் சொல்லுவேன். எனக்கு எப்போதுமே வயோலின், வயோலா போன்ற இசை கருவிகள் மீது காதல் அதிகம். அந்த சாயலை ரசிகர்கள் பாம்பு சட்டை படத்தின் பிண்ணனி இசையில் உணர்ந்து இருப்பார்கள். இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த என்னுடைய தயாரிப்பாளர் மனோ பாலா சாருக்கும், இயக்குநர் ஆடம் தாசனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை படத்தின் தார்மீக விமர்சனங்கள் யாவும் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு புதுவித நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.
என்னுடைய இசையில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் திரி. இந்த படத்தில் பாடல்கள் உட்பட மொத்தம் 7 இசை பதிவுகள் இருக்கின்றது. அவை யாவும் இசை பிரியர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் முழுவதுமாக நம்புகின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘பாம்பு சட்டை’ மற்றும் ‘திரி’ படத்தின் இசையமைப்பாளர் அஜீஷ்.