போராடும் விவசாயிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய அபிசரவணன்..!

0

 849 total views,  1 views today

நம்நாடு சுதந்திரம் பெற்று, 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதே வேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு விடியலை தேடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தலைநகர் டில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் நம் தமிழக விவசாயிகள். அரை நிர்வாண கோலத்தில் மத்திய அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் விதமாக இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி  டில்லியில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை, சந்திக்க சென்றிருந்த அபி சரவணன், அங்கு விவசாயிகள் கைது செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நமது விவசாயிகளுக்கு சட்ட உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் ராஜா ராம் மற்றும் ரீகன் அவர்கள் அலுவலகம் சென்று அவர்களை அழைத்து கொண்டு  பார்லிமெண்ட் போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் விவசாயிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிந்த பிறகு அன்று இரவு முழுவதும் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே இருந்து கொண்டு மறுநாள் நண்பகல் 12 மணி அளவில்  விவசாயிகள்  அனைவரும்  விடுதலை ஆகும் வரை காத்திருந்து அவர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு வெண்ணிற ஆடைகளை வழங்கி அவற்றை உடுத்தச்செய்து, அவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் அபிசரவணன்.

நடிகர் அபிசரவணன் தனது நண்பர்கள் மூலம் திரட்டிய நிதியை கொண்டு, கடந்த 31 நாட்களாக டில்லியில் ‘கிடைத்த’ உணவுகளை மட்டுமே உண்டு வந்த விவசாயிகளுக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  தமிழ முறைப்படி சமைத்த அசைவ உணவுகளை வாழை இலை வைத்து அன்றைய 3 வேளைகளுக்கும் வழங்கி விட்டு வந்துள்ளார். விவசாயிகள் அபிசரவணனை மனதார பாராட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரும் கடந்த 4 நாட்களாக நண்பர்களின் உதவியுடன் டில்லி விவசாயிகளுக்கு உணவளித்து வருகிறார் அபி சரவணன். அதில் ஒரு நாள் உணவை கவிஞர் தாமரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிசரவணன், இதற்கு முன் டில்லியில் இவர்கள் முதற்கட்ட போராட்டம் நடத்தியபோதும் அவர்களுடனேயே தங்கி அந்த போராட்டத்தில் சில நாட்கள் கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார் அதை தொடர்ந்து வந்த நாட்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு தன் கையிலிருந்தும் திரையுலகினர் மூலமாகவும் அவ்வப்போது உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.

Comments are closed.