*மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!!*

0

Loading

1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி  மற்றும்  எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன்  இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.
இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.
இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Share.

Comments are closed.