ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. இந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட கபாலி செல்வா, படத்தை பற்றிய சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
”இந்த ட்ரைலரின் வெற்றி ரஜினி சாரின் புகழுக்கு இன்னமொரு சான்றாகும். ‘பேர கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல’ என்பது மறுமுறை நிரூபணமாகியுள்ளது . அவரது ரசிகர்களுக்கு நன்றி . பல வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமீபத்தில் தான் கதையை முடித்து கோட்டீஸ்வர ராஜு சாரிடம் சொன்னேன். கதையை கேட்டவுடன் ஓகே சொன்னார்.
தம்பி ராமையா ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்து 9 கெட்டப்பில் நடித்தார். யாருமே சம்பளத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக நடித்துக் கொடுத்தனர். யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகனாக இருந்து வருகிறேன். 28 வருடங்களுக்கு முன்பு கேஸினோ தியேட்டர் அருகில் ரஜினி போஸ்டரை கிழித்துக் கொண்டிருந்தார்கள். நான் கோபப்பட்டு அவர்களை அடித்து விட்டேன். அந்த சம்பவத்தையும் படத்தில் ஒரு காட்சியாக வைத்திருக்கிறேன். அதுவும் இந்த படம் உருவாக ஒரு விதையாக அமைந்தது.
பிப்ரவரியில் கதை ஓகே ஆனவுடன் ரஜினி சாரிடம் போய் ஆசிர்வாதம் வாங்கினேன். வேர்ல்ட் ஆண்டி ஸ்மோக்கிங் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அதைப்பற்றி ரஜினி சாரிடமும் சொல்லி வாழ்த்து பெற்றேன். இந்த வருடம் ரஜினி பிறந்த நாளில் 1 லட்சம் குழந்தைகளிடன் எதிர்காலத்தில் புகை பிடிக்க மாட்டேன் என கையெழுத்து வாங்கிய பாண்ட் பத்திரங்களை அவரது பிறந்த நாள் பரிசாக ஒப்படைக்கப் போகிறேன்.
இதற்கு முன்பு கோல்மால் என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அப்போது செல்வா என்ற பெயரில் தான் இயக்கினேன். ஒரு ரஜினி ரசிகனாக என் பெயருக்கு முன் ரஜினி சாரின் அடைமொழியை போட்டுக் கொள்ள விரும்பினேன். இந்த படத்தில் அதை போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அது தான் கபாலி செல்வா என என் பெயர் மாற காரணம். இந்த கதைக்கு நாயகி தேவையில்லை என முடிவு செய்தேன். அதனால் நாயகி யாரும் படத்தில் இல்லை. ரஜினி ரசிகர்களுக்காக இந்த படம் எடுக்கவில்லை. எல்லா ரசிகர்களுக்காகவும் தான் இந்த படம். எல்லோரையும் படம் கவரும் என்றார் இயக்குனரும், ஹீரோவுமான கபாலி செல்வா.
இரவு பகல் பாராமல் 28 நாட்களில் படத்தை முடித்தோம். ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் கூட ரொம்ப ஜாலி தான் என்றார் நடிகர் ரமேஷ் திலக்.
இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் போது செல்வா சார் எனக்கு அறிமுகம் ஆனார். மிக வேகமாக படத்தை முடித்தார். ஆனாலும் தரத்தில் குறைவில்லாமல் சிறப்பாக படத்தை முடித்துக் கொடுத்தார் என்றார் நடிகர் குமரவேல்.
ராஜதந்திரம் படத்தில் நடித்த பின் இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டு ரிலீஸுக்காக காத்திருந்த நேரத்தில் வந்த வாய்ப்பு தான் 12 12 1950. மோ என்ற படத்தில் பணிபுரிந்த அதே குழு தான் இந்த படத்திலும் பணி புரிந்திருக்கிறார்கள். எந்த வகையிலும் இந்த படம் தரத்தில் குறைவில்லாமல் உருவாகியிருக்கிறது என்றார் நடிகர் அஜய்.
தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு, நடிகர் ஆதவன், பிரஷாந்த் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.