சினிமாவை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் கருதாமல், அதன் மூலம் சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் கலைஞர்களை மட்டுமே வரலாறு வாழ்த்தி வரவேற்கும். இந்தப் பட்டியலில் இடம் பெறப்போகும் அறிமுக இயக்குநர் ரமணி. மலையாளப் படவுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் சினிமா கற்றுத் தேர்ந்த இவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒளடதம்.
ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். சமீபத்தில் ரமணியை சந்தித்தபோது இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
மகாகவி பாரதியாரே ஒளடதம் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மருந்து மாத்திரைகளை சாப்பிடத்தேவையில்லாமல், சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி என்று ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்.
உலகெங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டிக் கொடுக்கும் ராட்சத்தொழிலாக இன்று மருத்துவம் திகழ்கிறது. இவ்வளவு பணப்புழக்கம் உள்ள தொழிலில் ஊழல் இல்லாமல் இருக்குமா…. அந்த ஊழலைத்தான் சுவராஸ்யமான கதையின் பின்னணியில் என்னுடைய ஒளடதம் படம் சுட்டிக் காட்டுகிறது. மருந்து மாத்திரைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய சூழலில் அவசியமான ஒன்று. இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்த விழிப்புணர்வு கட்டாயம் கிட்டும்.
டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நேதாஜி பிரபு என்பவரை யதேச்சயாக சந்திக்க நேர்ந்தது. ஒளடதம் என்ற தலைப்பில் அவர் எழுதி வைத்திருந்த கதைக்கு நான் அமைத்த திரைக்கதை அவரை மிகவும் கவரவே, என்னையே இயக்குநராக்கி படத்தையும் அவரே தயாரிக்க முன்வந்தார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நாயகன் நேதாஜி பிரபு வேடத்தைப்போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகி வேடத்தில் டில்லியைச் சேர்ந்த சமைரா நடித்திருக்கிறார். மருந்து நிறுவனம் ஒன்றில் நடைபெறும் தவறுகளை கண்டறியும் டாக்டர் வேடம் இது.
ரஞ்சனின் ஒளிப்பதிவும், இசையரசர் தஷி அவர்களின் பாடல்களும் படத்துக்கு மிகவும் பலம் சேர்க்கும்.
கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.அஜ்மல்கான் ரிஃபா அசோசியேட் சார்பில் உலகெங்கும் இப்படத்தைத் திரையிடுகிறார்.
இயக்குநர் ரமணியின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, வர்த்கமும் வித்தகமும் ஒன்றிணையும் வகையில் தரமான பொழுதுபோக்குப் படமாக ஒளடதம் உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது.
படத்தில் பங்கு பெறும் புதியவர்கள் அனைவரையும் வாழ்து கூற வரவேற்போம்.