தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
_திருக்குறள்
மூன்றாம் தலைமுறையாக நடிப்பில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லா நடிகர்களுக்கும் கிட்டி விடாது. இந்த வாய்ப்பு பெற்ற மிகச்சில நட்சத்திரங்களில் முத்துராமன் முக்கியமானவர்.
எம்.ஜி.ஆர்.சிவாஜி ஜெமினி என்று மூவேந்தர்கள் தமிழ்த் திரையை ஆண்டுகொண்டிருந்த காலத்திலேயே தனக்கென தனி பாணியைவகுத்துக்கொண்டு அழுத்தமாக காலூன்றி நின்றவர் முத்துராமன்.
அவரது மகன் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நாயகனாக பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, இளைய தலைமுறை நாயகர்களுக்கு ஈடுகொடுத்து இன்றுவரை நடித்து வருகிறார்.
மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் அறிமுகமான கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் இன்றைய முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்.
கார்த்திக்கும் கெளதமும் இணைந்து நடிக்கும் முதல் படம் படம் என்ற சிறப்பைப் பெறும் மிஸ்டர் சந்திரமெலி தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6ல் வெளியாகவிருக்கிறது.
மிஸ்டர் சந்திரமெளலி படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் கெளதம் கார்த்திக் இருட்டு அறைகளில் முரட்டுக்குத்தி வாங்கியபடி, ஹரஹரமகாதேவி என்று பாடிக்கொண்டிருக்காமல் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல கதையம்சங்கள் உள்ள படங்களைத் தேர்வு செய்து, திறமையை வெளிப்படுத்தக்கூடிய சிறப்பான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
_திருக்குறள்