உலக அரங்கில் சாதனை படைக்கும் “பேரன்பு”

0

 365 total views,  1 views today

ஆசியாவின் ஆஸ்கார் என்று புகழ்பெற்ற திரைப்பட விழா சீன தேசத்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா. 

21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் தேர்வான ஒரே தென்னிந்திய திரைப்படம் தமிழ் படமான “பேரன்பு”. 

P.L.தேனப்பன் தயாரிப்பில் இயக்குநர் ராமின் இயக்கத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி, தங்கமீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் மற்றும் பலர் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் படம் பேரன்பு. 

கடந்த ஜனவரியில் உலக திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடைய  47 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது.

சிறந்த ஆசிய படத்திற்காக கொடுக்கப்படும் நெட்பாக் விருதிற்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது.  மேலும் பார்வையாளர்கள் விருதுப் பிரிவிலும் கலந்துக்கொண்டது. பார்வையாளர்கள் விருதுப் பிரிவில் போட்டியிட்ட 187 படங்களில் பார்வையாளர்களின் வாக்கிற்கிணங்க பேரன்பு 20 ஆவது இடத்தை பிடித்தது. 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியப் படம் பேரன்பு. 

சீனாவின் ஷாங்காயில் முதல்காட்சி Asian premiere ஆக கடந்த 16ம் தேதி திரையிடப்பட்டது. 17ம் தேதி பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் கீழ் மீண்டும் திரையிடப்பட்டது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று எப்படி கை தட்டினார்களோ அப்படியே ஷாங்காயில் நடந்து முடிந்த இரண்டு காட்சியிலும் பேரன்பை பார்வையாளர்கள் பாராட்டினார்கள். 

மெகாஸ்டார் மம்மூட்டியின் நடிப்பை, உலகத்தரத்தில் ஆன நடிப்பு என சீன திரைப்பட விமர்சகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். தங்கமீன்களில் செல்லம்மாவாக நடித்த சாதனா இத்திரைப்படத்தில் “பாப்பா” என்ற கதாப்பாத்திரத்தில் மொத்தப் பார்வையாளர்களையும் தன் வசப்படுத்தினார். 

பார்வையாளர் கலந்துரையாடலில் சீன தேசத்து பெண் ஒருவர் தான் தங்கமீன்களின் பெரிய ரசிகை என்றும், பேரன்பு தங்கமீன்களை தாண்டி தனக்குப் பிடித்திருப்பதாகவும் கூறினார்.

பார்வையாளர்களின் பலத்த பாராட்டைப் பெற்ற பேரன்பை, இன்று 19ம் தேதி மாலை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மூன்றாம் முறையாக திரையிடுகிறது. விரைவில் இந்தியாவில் இத்திரைப்படம் நம் பார்வையாளர்களை வந்தடையும் என தயாரிப்பாளர் P.L.தேனப்பன் கூறினார்.         

 

Share.

Comments are closed.