கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி

0

 217 total views,  1 views today

அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த மாபெரும் அரசியல் சகாப்தத்தின் சப்தம் மெளனித்தது. ஆம் கண்ணீர்த்துளிகள் எங்களில் கண்களில் வழியாக ஊற்றெடுக்கிறது என்பதைவிட எங்கள் இதயத்தின் வழியாக குருதியாக வழிகின்றது.

கலைஞர் என்ற பெயர்ச்சொல் சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணி! இந்த அச்சாணி முறிந்ததே என்று கதறுகிறோம்! கலைஞர் என்ற உயிர்க்கரு இருட்டைக் கிழிக்க வந்த சூரியன் அது மறைந்ததே என்று இயற்கையிடம் மன்றாடுகிறோம்! மனசெல்லாம் புகைமூட்டமாய் இருள் சூழ்கிறது! மீண்டும் வெளிச்சம் வாராதோ என்று விம்மி அழுகிறோம்!

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியை வலுவான அடித்தளத்தின்மீது அமரவைத்ததோடு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தும் சக்தியாக உருவெடுத்த மாபெரும் தலைவரை தமிழகம் இழந்து தவிக்கிறதே என்று அழுது தவிக்கிறோம்.

திராவிடம் என்ற கலாச்சார சொல்லை கண்டறிந்தவர் பெரியார்! அதற்கு அணிசேர்த்தவர் அண்ணா! ஆனால் இரத்தமும் – சதையும் வழங்கி உயிர்சேர்ந்தவர் கலைஞர்.

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வு, தமிழர் வரலாற்றைப் திருப்பிக்காட்டும் காலக்கண்ணாடி.. தமிழ்நாட்டில் சமூக நீதியின் சாதனைகளை இந்தியக் கூட்டாட்சியின் உச்சியில் நின்று காலம் அறிந்து கூவிய சேவல் கலைஞர்! சமூகநீதிக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றி அதன் வழி இன்றைய தலைமுறைக்கான திசைக்காட்டியான நிற்பவர் கலைஞர்!

60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்தில் உறுப்பினராகி உயர்ந்தவர் கலைஞர் அன்றி வேறுயார்? இது வரலாற்றின் உச்சம்! ஒரு இயக்கத்திற்கு தலைவராக 50 ஆண்டு காலம் நின்று உழைத்தவர் இவரின்றி வேறுயார்! இதுதான் அசாத்தியத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டு அரசியல் ஆணிவேருக்கு தண்ணீரைப் பாய்ச்சிய தமிழ்நதி வற்றிவிட்டதை நினைத்து வேதனை அடைகிறோம்! காற்றை செலுத்திய கதிரவன் மூச்சை நிறுத்தியதை கண்டு சொல்லெண்ணா துயரம் அடைகிறோம்!

கலைஞர் எனும் காலச்சுவடுகளை கரையான்கள் அறித்துவிடமுடியாது! கலைஞர் எனும் உதய சூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது! தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை என்றான் பாவேந்தன்! கலைஞர் தமிழுக்கு தமிழருக்கு தொண்டு செய்து தமிழ்வேந்தன் அவர் சாவைத் தழுவினாலும் அவரது புகழ் என்றுமே சாகாது!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ., கருணாஸ் புகழஞ்சலி செலுத்தினார்.

Share.

Comments are closed.