“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..!

0

 220 total views,  1 views today

 

“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27-ம் தேதியன்று வெளியாகிறது.

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக் குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத் தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

IMG_6642

இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இதுதான் ‘ஜுங்கா’வில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு முதல் காரணம். 

நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அதுதான் ஆச்சரியமான விசயம். இன்றைக்கு சந்தோஷமான விசயமும்கூட.

vijay sethupathy

அருண் பாண்டியனை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்றே சொல்லலாம். அவருக்கும் எனக்குமிடையே இதற்கு முன்பு எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. இந்தப் படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன் வந்தார். வாங்கவும் முன் வந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன் வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போதே அருண் பாண்டியன் சொன்னார். 

ஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன் பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேசன் தேடுவதாகவும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும்போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார்.

saranya ponvannan

சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்கு பருவக் காற்று’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்த சிந்தனை என்னை ஈர்த்தது. இந்தப் படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி அவர் இந்த கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்திடவேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்த படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.

IMG_6501

மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கொண்டு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த நடிகைகளில் ஆகச் சிறந்த நடிகை மடோனாதான் என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.

யோகி பாபுவுடன் ‘ஆண்டவன் கட்டளை’க்கு பிறகு நாங்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படப்பிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ, அதை பேசி அசத்துவார்.

இந்தப் படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம் உங்களின் சுவைக்காக இம்மாதம் 27-ம் தேதியன்று உங்களிடத்தில் சமர்ப்பிக்கிறோம்…” என்றார்.

IMG_6483

இந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில், “இது கஞ்சனாக வாழும் ஒரு  அடியாள் கும்பலின் தலைவனைப் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது.

அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இந்த ‘ஜுங்கா’வின் திரைக்கதை.

இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றி பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்…” என்றார்.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன், சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன்  கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

இறுதியாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Share.

Comments are closed.