பூஜை அன்றே முழு சம்பளத்தையும் வழங்கிய தயாரிப்பாளர்

0

 235 total views,  1 views today

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசினர்.
 
இமைக்கா நொடிகள் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை பற்றி சொல்லும்போதே இயக்குனர் அஜய் புதுமையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக கடினமாக உழைத்தோம். படத்தில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றுக்காக ஹாங்காங்கில் இருந்து டீம் ஒன்றை வரவழைத்தோம். எந்த தயக்கமும் இல்லாமல் செலவு செய்தார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லோருடைய ஒத்துழைப்பால் படத்தில் சண்டைக்காட்சிகள்  மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியான பிறகு நன்றாக பேசப்படும் என்றார் ஸ்டன் சிவா. 
 
இந்த படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம்.  இயக்குனர் அஜய் கதையை சொன்னபோதே அதற்குள் ஒரு வசீகரம் இருந்தது. நம்மை கட்டிப்போடும் பல விஷயங்கள் கதையில் இருந்தன. புதுமையான விஷயங்களை தேடுவது என்ற இயக்குனரின் தேடல் பெரியது. தனக்கு என்ன தேவை என்பதை கேட்டு வாங்கும் தெளிவு அவரிடம் இருந்தது. இது என்னுடைய 24வது படம், முதல் முறையாக இந்த படத்தில் தான் பூஜை அன்றே முழு சம்பளத்தையும் வழங்கினார் தயாரிப்பாளர். படம் 2 மணி நேரம் 50 நிமிடம். ஆனால் தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம் கூட கண் இமைக்காமல் படத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
 
இரண்டு வருட கடின உழைப்பு, பல அவமானங்கள் தாண்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது இமைக்கா நொடிகள். படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் 5 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருக்கிறோம். அனுராக் காஷ்யாப் கேரக்டர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும். விஜய் சேதுபதி, நயன்தாரா காட்சிகள் ஆண்கள் கண்களிலும் கண்ணீரை வரவைக்கும். ஆக்‌ஷனில் நாங்கள் எந்த காம்ப்ரமைஸும் செய்யவில்லை. சண்டைக்காட்சிகளுக்கு தேவையான விஷயங்களை தயாரிப்பாளரிடம் எப்படி கேட்டு வாங்குவது என்ற கலை தெரிந்தவர் ஸ்டன் சிவா. ஆதியின் பின்னணி இசையோடு படத்தை பார்க்க நானும் ஆவலோடு இருக்கிறேன் என்றார் தயாரிப்பாளர் சிஜே ஜெயகுமார்.
 
தமிழில் மல்ட்டிஸ்டாரர் படம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் அதை செய்து காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லா முன்னணி நடிகர்களுக்கும் எந்தவித குறையும் இல்லாதவாறு  கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர். நயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதையாக எனக்கு தெரிகிறது. ஆக்‌ஷன் படம் என்றாலே பெரிய பட்ஜெட் படம் தான். நிச்சயம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர்.
 
இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தின் பின்னணி இசை தான் மிகப்பெரிய தூணாக இருக்க போகிறது. இசை வெளியீட்டுக்கு பிறகு இரண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பின்போதே அவ்வப்போது ஸ்டுடியோவுக்கு வந்து பின்னணி இசையை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் மற்றும் ஒளிப்பதிவு. அவர்கள் பட்ட கஷ்டம் தான் என்னையும் நல்ல இசையை கொடுக்க ஊக்குவிக்கிறது. எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நயன்தாரா கம்பீரமாக இருக்கிறார். படத்தின் சக்திக்கும் மீறி அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
 
டிமாண்டி காலனி படத்தின் போதே நான் பயந்தேன், அதை வெற்றிப் படமாக்கி விட்டீர்கள். இனிமேல் அந்த மாதிரி பயமே கூடாது என நினைத்தேன், அதற்காக உழைத்திருக்கிறேன். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுமே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், நான் தான் கத்துக்குட்டி. அவர்களுடன் வேலை பார்த்தது ஒரு ஜாலியான, நல்ல அனுபவம். என் குரு முருகதாஸ் சார் சொன்னது பாதி வெற்றி திரைக்கதையிலும், நடிகர்கள் தேர்வில் 25% வெற்றியும் இருக்கும். மீதி 25% தான் படப்பிடிப்பில் செய்ய வேண்டியவை. அதனால் தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் உட்கார்ந்து சண்டை போட்டு திரைக்கதையை எழுதினோம். 2013ல் அதர்வாவிடம் இந்த கதையை சொன்னேன், அவரும் ஓகே சொன்னார். ஆனால் முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது தொடங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5  ஆண்டுகள் கழித்து இப்போது தான் படமாக வந்திருக்கிறது. அதர்வா என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன். ஆதி ரொம்பவே பாஸிடிவான மனிதர், நமக்கு தன்னம்பிக்கையை விதைத்து விடுவார். தயாரிப்பாளர் செய்த எல்லா விஷயங்களுமே படத்தின் மெறுகேற்றலுக்காக உதவியது, ஆகஸ்ட் 30ஆம் தேதி படம் ரிலீஸ் அக இருக்கிறது என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
 
இமைக்கா நொடிகள் ரோலர் கோஸ்டர் ரைடை விட மிகவும் கஷ்டமான ஒரு ரைட். என்ன ஆனாலும் இந்த படத்தை சமரசத்தோடு எடுக்க வேண்டாம் என நானும் அஜயும் முடிவெடுத்தோம். நிறைய அலைச்சலுக்கு பிறகு தயாரிப்பாளர் ஜெயகுமார் படத்துக்குள் வந்தார். அவர் தான் கதையை நம்பி செலவு செய்தார். நயன்தாரா, ஆர்டி ராஜசேகர், அனுராக் காஷ்யாப் என என் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அத்தனை பேருடனும் ஒரே படத்தில் வேலை செய்தது பெரிய சர்ப்ரைஸ். இந்த படத்தின் ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றார் நாயகன் அதர்வா முரளி. 
 
இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி, இணை தயாரிப்பாளர் அருண், விஜய், சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
 
 
Share.

Comments are closed.