பைரஸிக்கு எதிராக 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் மாரத்தான்

0

 632 total views,  2 views today

பைரஸிக்கு எதிராக ஹீரோ டாக்கீஸ் நிறுவனம் 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் 24 மணி நேர தொடர் மாரத்தான் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே சதீஷ்குமார், ஏபி இண்டர்நேஷனல் சஞ்சய் வாத்வா ஆகியோர் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இன்று 12 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி நாளை 12 மணி வரை தொடர்ந்து நேரலையாக நடக்க இருக்கிறது.
3 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஹீரோ டாக்கீஸை ஆரம்பித்தோம். பல பேருக்கு ஹீரோ டாக்கீஸ் என்றால் என்ன? நாங்கள் யார் என்பதே தெரியாது. 5 வருடங்களுக்கு முன்பு பைரஸியால் தான் எங்கள் நிறுவனமே துவங்கப்பட்டது. துப்பாக்கி படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத சூழ்நிலையில் டோரண்டில் பார்த்தோம். எங்களுக்கு ஒரே குற்ற உணர்வாக இருந்தது. நம்மை போல பலர் இந்த குற்ற உணர்வோடு இருப்பார்கள் என நினைத்தோம். அங்கு ஆரம்பித்து நிறைய தயாரிப்பாளர்களை பார்த்து பேசினோம். அரிமா நம்பி படத்தை முதல் படமாக எங்கள் ஹீரோ டாக்கீஸில் வெளியிட்டோம். கொஞ்சம் பேர் தான் முதலில் பணம் கட்டி படம் பார்க்க முன் வந்தார்கள். இப்போது 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள், 83 நாடுகளில் எங்கள் ஹீரோ டாக்கீஸை பார்க்கிறார்கள். பைரஸியை மக்கள் திருட்டாக பார்க்காதது தான் பெரிய வேதனை. திருட்டு தனமாக இணையத்தில் படத்தை பதிவேற்றும் அவர்களை மக்கள் பெரிய ராபின் ஹூட்டாக நினைக்கிறார்கள். மக்கள் திரைத்துறையின் கஷ்டத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹீரோ டாக்கீஸ் துணை நிறுவனர் பிரதீப்.
பைரஸிக்கு பயந்து படத்தை ரிலீஸ் செய்யாமலும் இருக்க முடியாது. வெளி நாடுகளில் ரிலீஸ் செய்வதால் தான் திருட்டு விசிடி வெளியாகிறது என்பது பொய். நம்ம ஊரில் மட்டும் ரிலீஸ் செய்யப்பட்ட பல படங்கள் முதல் காட்சியிலேயே திருட்டு தனமாக இணைய தளத்தில் வெளியாகி இருக்கின்றன. அதில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மற்றும் இந்தி திரையுலகம் தான். மலையாளம், கன்னடம், தெலுங்கு திரையுலகில் பைரஸி இல்லை. தமிழ் சினிமாவில் படம் ரிலீஸின் போது மட்டும் லிங்குகளை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். அது பைரஸியை ஒழிக்கும் வழி இல்லை.
இந்தியில் பெரும் வெற்றி பெற்று 500 கோடி வசுல் செய்த டங்கல் படத்தை 4 கோடி மக்கள் தான் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார்கள். 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திருட்டு வீடியோவில் தான் பார்த்திருக்கிறார்கள். அது பெரிய இழப்பு. திரையரங்குகளில் அல்லது காசு கொடுத்து ஆன்லைனில் படம் பார்த்தால் தான் தமிழ் சினிமா நல்ல நிலைக்கு போகும். பைரஸியை ஒழிக்க மத்திய அரசு, மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
பொதுநலம் கருதி ஹீரோ டாக்கீஸ் இதை செய்வது ஒரு நல்ல முன்னெடுப்பு. வெளிநாடுகளில் இருந்து தான் திருட்டு விசிடி வெளியாகிறது என்று எல்லோரும் சொல்லியதால் எங்கள் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் செய்தோம். ஆனால் முதல் காட்சியிலேயே திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் இருந்து படம் வெளியாகியது. பைரஸியை தடுக்க படம் எங்கிருந்து படம் லீக் ஆகிறது என்பதை கண்டு பிடித்தாலே போதும். இந்த நிகழ்ச்சியில் எங்களுக்கு தெரியாத, உங்கள் கருத்தையும் எங்களுக்கு தெரிவியுங்கள் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.
பைரஸி கோலிவுட்டில் மட்டுமல்ல, எல்லா இண்டஸ்ட்ரியிலும் இருக்கிறது. மக்களுக்கு பைரஸியை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை, பைரஸியில் படம் பார்ப்பது குற்றம் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு புரிய வைப்பது தான் இந்த மாரத்தான் நிகழ்ச்சியின் நோக்கம். ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் ஹீரோ டாக்கீஸ் வெப்சைட்டில் நீங்கள் இந்த மாரத்தான் நிகழ்ச்சியை பகல் 12 மணியில் இருந்து நேரலையில் பார்க்கலாம் என்றார் ஹீரோ டாக்கீஸ் மார்க்கெட்டிங் ஹெட் ஜெகன்.
பைரஸிக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்தோம். இதை நடத்தும் தகுதி எங்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று நம்புகிறோம் என்றார் ஹீரோ டாக்கீஸ் துணை நிறுவனர் ஆதி. விழாவில் பைரஸிக்கு எதிரான  வாசகங்களையும் வெளியிட்டனர். விழாவை ஆர்ஜே விக்னேஷ் தொகுத்து வழங்கி வருகிறார்.
 

 

Share.

Comments are closed.