மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!

0

 205 total views,  1 views today

“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..!
கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..
ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா..? இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..
அந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா. படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.
ஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..
அதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது..
இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
 
திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம். 
“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.
எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.. தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.
ஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.
இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.
அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில்  ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.
வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.
ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.
.
Share.

Comments are closed.