முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”

0

 393 total views,  1 views today

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த “கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா” என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்” என பேசினார்.

தனது வழக்கமான ஸ்டைலில் “பவர் ஸ்டார்” சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் பேசியதாவது, “முதல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். எவ்வளவோ போலீசை பார்த்தாச்சு என்று உள்ளே போன போது தான் அது டம்மி போலீஸ் என்று தெரிந்தது. சரி… இயக்குநர் நமக்கு என்ன வேஷம் கொடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், பொசுக்கென்று சி.எம் கேரக்டர் கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா? என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.

“லத்திகா” படத்தை நான் தான் 100 நாட்களுக்கு ஓட வைத்தேன். அதே போல இந்தப் படத்தையும் 100 நாள் ஓட வைப்பேன். ஏன்னா நான் முதல்வராக நடித்த படம் ஜெயித்தே தீரவேண்டும்” என்று கலகலப்பூட்டினார்.

தற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு – ராஜ்குமார், பாடல்கள் – யுக பாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் – கானா பாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரசாக்.

Share.

Comments are closed.