தமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது? – எம்.எல்.ஏ., கருணாஸ் கேள்வி

0

Loading

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்று, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை கொலை செய்துள்ளது தமிழக காவல்துறை இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் அமைதியாக அறவழியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 100 நாள் போராட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டுள்ளனர். 

 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை அழைத்து இந்த அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செயல்பட நினைக்காமல் பேரணி நடத்திய மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக்க தாக்கி அது மிகப்பெரிய கலவரமாக வன்முறையாக வெடித்து துப்பாக்கிச்சூடு வரை நடத்தியிருப்பது கொடூரத்தின் உச்சம்!

தன் சொந்த மக்கள் ஜனநாயக வழியில் போராடும் போது மக்களைக் காக்க வேண்டிய அரசு யாரையோ திருப்தி படுத்த மக்களை காவுகொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

 துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும் மக்களின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும்! துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள தவறினால் தூத்துக்குடி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலவரபூமியாகும்!

 

Share.

Comments are closed.