30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு

0

 280 total views,  2 views today

ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.

18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.

அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.

மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.

Share.

Comments are closed.