![]()
சென்னையில் நடைபெற்ற ‘கடைசி காதல் கதை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் பேசும்போது, “நான் 1415 கதையை எழுதி வைத்திருக்கிறேன். அதில் 141 ஆவது கதை மற்றும் 231ஆவது கதைக்கும் அட்வான்ஸ் வாங்கி அது சில காரணத்தால் எடுக்க முடியவில்லை. கடைசி காதல் கதை 531 ஆவது கதை” என்றார்.
என்ன இந்த மனிதர் ஆயிரக்கணக்கில் கதைகளை எழுதிக் குவித்து வைத்திருக்கிறாரே….ரோபோவை எழுத வைத்தால்கூட இவ்வளவு எழுதியிருக்காதே…பத்திரிகைகளில் வருமே… ஒரு வரிக் கதை என்று…..ஒரு வேளை அப்படி ஒரு வரிக்கதைகளாக ஆயிரக்கணக்கில் எழுதிக்குவித்திருப்பாரோ என்று தோன்றியது.
நாயகனாக ஆகாஷ் பிரேம், நாயகியாக ஷாலு ஷாமு இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். பாலசந்தர் பாரதிராஜா போன்ற ஜாம்பவான்கள் அறிமுகப்படுத்திய புதுமுகங்களுக்கும் சமீபகாலமாக அறிமுகமாகும் புதுமுகங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அப்போதெல்லாம் புதுமுகங்களை இயக்குநர்கள் அறிமுகப்படுத்துவார்கள். இப்போதெல்லாம் புதுமுகங்கள் தங்கள் அப்பா அம்மாவின் பணத்தில் சொந்தப் படமெடுத்து அறிமுகமாகிறார்கள். முன்பு பையன் புது மாடல் பைக் வேண்டும் எனக்கேட்டால் மறுக்காமல் வாங்கித் தரும் அப்பாக்கள், இப்போது, மகன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் சொந்தமாக படம் எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சினிமா டிஜிட்டலுக்கு மாறியதால் வந்த விளைவுகளில் இதுவும் ஒன்று. அதனால்தான் புதுமுகங்கள் அறிமுகமாகும் படங்கள் புற்றீசல் போல் புறப்பட்டு வந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கின்றன.
இந்த விழாவில் பாக்கியராஜ் பேசும்போது, கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது சில படங்களைப் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது என குறிப்பிட்டார். அவர் பேச்சில் உள்குத்து எதுவும் இல்லை என்று நம்புவோமாக…..
நகைச்சுவை நடிகர் சாம்ஸ் பேச்சிலும் நகைச்சுவை தெறித்தது….படத்தில் மொத்தம் 60 ஷாட்ஸ். அதில் நானே 120 ஷாட்ஸ் செய்திருக்கிறேன் என்றாராம். அது எப்படி மொத்தமே 60 ஷாட்ஸ் இவர் எப்படி 120 ஷாட்ஸ் நடித்திருக்க முடியும். ஒரு வேளை வேறு படத்தில் நடித்த ஷாட்ஸையும் கொண்டுவந்து இந்தப் படத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கொடுத்து விட்டாராரோ என்னவோ.

