இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதேயில்லை. இந்த கூட்டணியில் சமீபத்தில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை இரு நாட்களுக்கு முன்பு FMல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. மறுபுறம், திரை ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமைகளை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்ஸாண்டர் பெற்றிருப்பதால், படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்துவதும், பெரிய அளவில் வெளியிடுவதும் ஒரு நல்ல படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற ஒரு வழக்கமான அனுமானங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஒரு நல்ல படம் தான் தயாரிப்பாளரையோ அல்லது வினியோகஸ்தரையோ உயர்த்தும். இயக்குனர் சுசீந்திரன் திரைப்படங்கள் எப்போதுமே திரை வணிகர்களின் பட்டியலில் ஒரு வலுவான நிலையை அடைய தவறியதே இல்லை. அழுத்தமான கருவை மிக நேர்த்தியாக வழங்கும் அவரது சூத்திரம் தான் அவரை தொடர்ந்து வெற்றியாளராக வைத்திருக்கிறது. புதுமுகங்களை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, சிறப்பான திரைப்படங்களை தொடர்ச்சியாக வழங்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருக்குறார். அந்த வகையில் “ஏஞ்சலினா” படம் தொடக்கத்தில் இருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது, நான் தனிப்பட்ட முறையில் அதன் ஒவ்வொரு செய்தியையும் கவனித்து வருகிறேன். வண்ண மயமான, இளமையான விஷயங்களை காட்டும் அதே நேரத்தில், திகிலூட்டும் அம்சங்களை கொண்ட அற்புதமான கதையையும் கொண்டுள்ளது” என்றார்.
ஏஞ்சலினாவின் இசை வெற்றியை பற்றி அலெக்ஸாண்டர் கூறும்போது, “சுசீந்திரன் – டி இமானின் அசத்தல் கூட்டணி, அவர்கள் பயணத்தின் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை பெறறு வருகிறது. ஏஞ்சலினா இசைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இசை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் எனக்கு பிடித்தமான பாடல். விரைவில் எங்கள் விளம்பர பணிகளை துவங்க இருக்கிறோம், சரியான ஒரு ரிலீஸ் தேதியை முடிவு செய்த பிறகு அதை அறிவிப்போம்” என்றார்.
க்ரிஷா குரூப், சரண் சஞ்சய், சூரி, தேவதர்ஷினி மற்றும் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்த ஏஞ்சலினா, காதல் அம்சங்களை கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகை படம். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கே.வி.சாந்தி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.சூர்யா (ஒளிப்பதிவு), தியாகு (படத்தொகுப்பு), ஜிசி ஆனந்தன் (கலை), டி இமான் (இசை), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி) மற்றும் ஷோபி (நடனம்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.