படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன்.
உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் உதவி புரிந்து வருகிறார்.
நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ட்ரெயிலர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் ‘நெடுநல்வாடை’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பவருமான ஐந்துகோவிலான் பேசியபோது,’’ ஒரு தயாரிப்பாளருக்கு படம் இயக்கும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகிற இந்தக் காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப்பெரிய சாதனை’ என்றார்.
அடுத்து 50 தயாரிப்பாளர்ளின் சார்பில் பேசிய சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகஸியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார். ‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.
எஸ்கேப் ஆர்டிஸ்டின் தயாரிப்பாளர் மதன் பேசும்போது,’இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடையை செல்வக்கண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அந்த 50 நண்பர்களுக்கும் கண்ணன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்’ என்றார்.
அடுத்து நன்றி உரையாற்றிய இயக்குநர் செல்வக்கண்ணன்,’ இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் என்றார்.
முக்கிய கதாபாத்திரங்கள் :
பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்குநர் : செல்வகண்ணன்
இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கலை : விஜய் தென்னரசு
சண்டை பயிற்சி : ராம்போ விமல்
நடனம் : தினா, சதீஷ்போஸ்
மக்கள் தொடர்பு : மணவை புவன்