![]()
தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அது விஷயமாக ஒருவரை சந்திக்கச் செல்கிறார்.
கொண்டாட்டம் மிக்க பார்ட்டியிலிருந்த அந்த நபர் வேலை வாங்கித் தருவதாக உறுதி கொடுக்கிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் வற்புறுத்தல் காரணமாக அந்த பார்ட்டியில் மது அருந்தும் அனுபமா, சற்று நேரத்தில் ஓவராக குடித்துவிட்டு சுயநினைவை இழக்கும் நிலைக்குச் சென்று விடுகிறார்.
இரண்டு மாதங்கள் கழித்து அனுபமாவுக்கு வேலை கிடைத்து விடுகிறது.
அதே சமயம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்ல, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் தெரிகிறது.
யாரால் இந்த விபரீதம் நடந்தது? எப்போது நடந்தது? என்பதைக் கூட அவரால் யூகிக்க முடியவில்லை.
அனுபமாவின் மிக நெருங்கிய தோழி உதவ முன் வரவே இருவரும் சேர்ந்து மருத்துவர் ஒருவரை சந்தித்து கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் அது கொரனா பெரும் தொற்று காலம் என்பதால் மருத்துவரை சந்திப்பதே பெரும்பாடாக இருக்கிறது.
சந்தித்த ஒரு மருத்துவரும் இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்ட நிலையில் திடீரென கொரனா தாக்கி இறந்து விடுகிறார்.
இறந்த மருத்துவரின் உதவியாளர் அவர் பங்குக்கு பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுகிறார்.
இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் லாக் டவுன் படத்தின் கதை.
வேலை தேடும் படலத்தில் தொடங்கி அப்பா சார்லி, அம்மா நிரோஷா, மற்றும் பாட்டி மீது அன்பைப் பொழிவதிலாகட்டும் கோபப்படுவதாகட்டும் அப்படியே மத்திய வர்க்க பெண்ணை பிரதிபலித்து முத்திரை பதிக்கும் வகையில் நடித்து நெஞ்சில் நிறைகிறார் அனுபமா பரமேஸ்வரன்.
மொத்த படத்தையும் இவரே தன் தோளில் சுமந்து இருக்கிறார் என்றால் மிகையாகாது.
உண்மைக்கு நெருக்கமாக நிற்கும் காட்சிகளை யதார்த்தமாக ஒளிப்பதிவாளர் சக்திவேல் படம் பிடித்திருப்பது படத்திற்கு பலம்.
முதல் படத்திலேயே ஓர் இளம் பெண்ணின் உணர்வுபூர்வமான மனப்போராட்டங்களை அப்படியே திரையில் வடித்த அறிமுக இயக்குனர் ஏ. ஆர். ஜீவா டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
பார்ட்டியில் சந்தித்த நபர் வேலை வாங்கித் தருவதாக சொல்லி உறுதி அளிக்கும் போது குறிப்பிட்ட ஐ டி நிறுவனத்தின் பெயரை சொல்லுவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாமே?
இசையமைப்பாளர்கள் என.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசை அமைப்பு படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
மெயின் ஸ்ட்ரீம் படத்தில் நல்லதொரு கருத்தையும் கலந்து கொடுத்த இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.
அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய அருமையான படைப்பு லாக் டவுன்.
மதிப்பெண் 4/5


