Wednesday, October 28

மாநாடு – விமர்சனம்

Loading

Time-loop எனப்படும் கான்செப்டில் வந்திருக்கும் வித்தியாசமான அதே சமயம் விறுவிறுப்பான படம் மாநாடு.

கடந்த வாரம் வெளிவந்த ஜாங்கோ Time-loop கான்செப்டில் கவனக்குறைவாக இருந்தால் படம் எப்படி சறுக்கி விடும் என்பதற்கு உதாரணம் என்றால், இப்போது வந்திருக்கும் மாநாடு, Time-loop கதையை எவ்வாறு சரியாகக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணம்.

நண்பர் பிரேம்ஜி காதலிக்கும் பெண்ணை, திருமணத்தன்று கடத்தி நண்பனுக்கு பதிவுத் திருமணம் செய்து வைக்க வருகிறார் சிம்பு. திட்டமிட்டபடி வெற்றிகரமாக கடத்திக் கொண்டு வரும் போது ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ள, அப்போது அங்கு வரும் காவல்துறை உயர் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா, முதலமைச்சரை கொலை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உன் நண்பர்களை ஒவ்வொவராக கொலை செய்து விடுவேன் என மிரட்டவே, சிம்பு முதல்வரை கொல்ல சம்மதிக்கிறார்.
போலீஸ் சிம்புவை சுட்டுக் கொல்கிறது. சட்டென விழித்துப் பார்த்தால், சிம்பு மீண்டும் விமானத்தில் இருக்கிறார். கதை முதலில் இருந்து ஆரம்பிக்கிறது. முதல்வரை கொல்லும் சதி பற்றியும், தான் Time-loopல் சிக்கிக்கொண்டிருப்பதையும் உணர்ந்து கொள்கிறார் சிம்பு.
இப்படி துவங்கும் படம் பின்னர் ஜெட் வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
முதல்வரை கொல்ல திட்டமிட்டிருப்பது யார்… அதை சிம்பு முறியடித்தாரா இல்லையா என்பதே மாநாடு.
காலிக் வேடத்தில் அசத்தலாக நடித்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார் சிம்பு. அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பவர் பிரதான வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா. கொஞ்சம் எக்சென்ட்டரிக் டைப் பாத்திரம் என்றால் கனகச்சிதமாக செய்து பெயர் வாங்குவதற்கு அவருக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன. ஒரு காட்சியில் சூர்யாவைப் பற்றி பிரேம்ஜியிடம் உன்னை விட அவன் பெரிய நடிகன்டா என்று சிம்பு சொல்லும்போது அரங்கமே அதிருகிறது. நாயகனாக நடித்த மனோஜ், உதயா, போன்றவர்கள் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.
காட்சிகள் திரும்பத் திரும்ப வரும்போது சலிப்பு ஏற்படக்கூடிய ஆபத்தை மிக அழகான, வலுவான திரைக்கதை மூலம் அநாசியமாக கடந்து விறுவிறுப்பாக படத்தை கொண்டு செல்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதற்கு அவருக்கு பெரிதும் துணை நிற்பது கே.எல். பிரவீண் படத்தொகுப்பு. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது.
விமான நிலைய மேற்கூரை கண்ணாடி உடைந்து விழும்போது, சென்னை விமான நிலைய காண்ட்ராக்டர்தான் இங்கும் காண்ட்ராக்ட் எடுத்தவரா என்ற நையாண்டியும், அரசியல் கட்சி பேனர் விழுந்து பெண் இறந்ததையும் போகிற போக்கில் சாடியிருப்பது ரசிக்க வைக்கிறது.
நெட்டிசன்கள் மாநாடு படம் எந்த ஆங்கலப்படத்திலிருந்து சுட்ட கதை என்ற ஆராய்ச்சியில் இறங்குவதற்கு இடம் கொடுக்காமல், தனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த டைம் லூப் ஆங்கிலப்படங்களை பட்டியலிட்டு ஒரு காட்சியில் வசனம் மூலம் சொல்லி விடுகிறார் வெங்கட் பிரபு.
இயக்குநரின் நடிகராக மாறினால் வெற்றிப் படத்தை தர முடியும் என வெங்கட் பிரபு காம்பினேஷனில் நிரூபித்து இருக்கிறார் சிம்பு,
சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் விறுவிறுப்பான படம் மாநாடு
மதிப்பெண் 4 /5