841 total views, 1 views today
நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம். ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு, எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம்” என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.
“பெற்றோர்களின் வற்புறுத்தலால் இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் எங்கள் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை. விரைவில் எங்கள் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன்.