காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், ‘அறம்’ செய்வதில் தான் இருக்கின்றது….. “அறம் செய்ய விரும்பு….” என்ற ஆத்திச்சூடி வரிகள் மூலமாக தான் மனித வாழ்வு முழுமை அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது…. அதனை உறுதி படுத்தும் வகையில் உருவாகி இருப்பது தான், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ திரைப்படம்.
அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி வரும் ‘அறம்’ திரைப்படத்தை ‘கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் கோட்டப்பாடி ஜே ராஜேஷ். ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்திருக்கும் இந்த ‘அறம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்களுள் ஒருவரான பீட்டர் ஹெய்ன் என தலைச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
“உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் ‘அறம்’. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும்….எனவே தான் நாங்கள் படத்திற்கு ‘அறம்’ என்று தலைப்பிட்டோம். ‘மாவட்ட ஆட்சியர்’ என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா அவர்கள் வழங்கி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….எங்கள் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம்…. அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் பெருமையாக இருக்கின்றது….விரைவில் எங்களின் ‘அறம்’ திரைப்படம் மூலம் சமூதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார்