ஒரு ஆட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “ஒரு கிடாயின் கருணை மனு”. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’ நிறுவனத்தின் சார்பில் சாகர் சத்வானி (மூத்த துணை தலைவர்), சிட்தி பூஜா ராவ் (தலைமை நிர்வாகி), இயக்குநர் சுரேஷ் சங்கையா (‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவி இயக்குநர்), முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஆடு, விதார்த் – ரவீனா (பிரபல டப்பிங் கலைஞர்), ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் ஹலோ கந்தசாமி, ஒளிப்பதிவாளர் ஆர் வி சரண், இசையமைப்பாளர் ரகுராம், படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநர் டி கிராபோர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
“ரசிகர்கள் அனைவரும் குடும்பமாக வந்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. அதிக நகைச்சுவை, சிறிதளவு செண்டிமெண்ட் என மிக சிறப்பான முறையில், குடும்பங்களை கவரக் கூடிய விதத்தில் இந்த படம் உருவாகி இருக்கின்றது” என்று கூறுகிறார் சாகர் சத்வானி
“இந்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்கும் பொழுது எனக்கு என்னுடைய மைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் திரையுலகில் சாதனை படைத்த திரைப்படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பிரபு சாலமன் .
“எந்த ஒரு படம், முழு அர்ப்பணிப்போடு பணிபுரியும் நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கின்றதோ, அந்த படம் நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வென்றுவிடும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. இது போன்ற ஒரு தரமான அதே சமயத்தில் தனித்துவமான கதையம்சத்தை தேர்வு செய்த ஈரோஸ் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன். எப்படி பல வருடங்களுக்கு முன்பு ஆட்டை வைத்து எடுக்கப்பட்ட ஆட்டுக்கார அலமேலு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோ, அதைவிட அதிகமான பாராட்டுகளை இந்த ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பெற்று, தமிழ் திரையுலகில் புதியதொரு சாதனையை படைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் நாசர்