‘ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’ தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா (‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவி இயக்குநர்) இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. விதார்த் – புதுமுகம் ரவீனா (பிரபல டப்பிங் கலைஞர்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில், ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநராக டி கிராபோர்ட் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ குழுவினர், தங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவிற்காக ஒரு குறும் காணொளியை வெளியிட்டுள்ளனர்.
“ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம். எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் ‘மகளிர் தின’ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகர் விதார்த்.