நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ் இயக்கி இருக்கும் இந்த ‘பண்டிகை’ படத்தில், கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘பண்டிகை’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார்.
“எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அன்போடு அழைக்கின்றேன். இவர்கள் முன்னிலையில் எங்கள் ‘பண்டிகை’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.