கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!

0

Loading

ஒரு சில படங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நல்ல கதைகள் தான் உலக அளவில் ரசிகர்களால் ஆரத்தழுவி ஏற்றுக் கொள்ளப்படும். அந்த வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு படம் தான் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் கோலி சோடா. ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற கோலி சோடாவின் இரண்டாவது பாகம் டீசர் வெளியானதில் இருந்தே ஒட்டு மொத்தமாக ரசிகர்களை

ஈர்த்து வருகிறது. அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலி சோடா 2 இந்த சீசனில் ரசிகர்களை கவரும் படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள்  மட்டுமல்லாமல், வணிக வட்டாரங்களும்  கோலி சோடா 2 மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள். 

கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியிருப்பது கோலி சோடா 2 படக்குழுவை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, “நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது. கோலி சோடா படத்தின் வெற்றி எனக்குள் இருந்த நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து, உடனடியாக புது களத்தில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. கிளாப் போர்டு சத்தியமூர்த்தி எங்களை போலவே படத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து, எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கும். குறிப்பாக சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் ஆன்மாவை உயர்த்தி, எல்லோரையும் வசீகரிக்கும்” என்றார்.

கோலி சோடா 2 படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடுகிறார். சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.

Share.

Comments are closed.