முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்களில் வெளியாவதால் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ‘செய் ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் குறிப்பிட்டார்.
ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில்,‘ நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். திலீப், பிருத்விராஜ், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். தமிழ் படத்தை இயக்கவேண்டும் என்று ஆசையிருந்தது. திரைக்கதையாசிரியர் ராஜேஷைத்தவிர டெக்னிசீயன்ஸ் எல்லாரும் புதியவர்கள். இவர்களின் சப்போர்ட் எனக்கு எப்படி கிடைக்கும் என்ற தயக்கம் முதலில் இருந்தது. மொழி வேறு பிரச்சினை. எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. ஆனால் கதை விவாதத்தின் போதே எல்லாம் டெக்னிசீயன்களின் சப்போர்ட் கிடைத்தது. இந்த படம் ஒரு கமர்சியல் பேமிலி எண்டர்டெயினராகத்தான் உருவாகியிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பொதுவாக படத்தின் திரைக்கதையை படமாக்கும் போது இந்த பாடல்காட்சி தேவையா? இந்த காட்சியில் நூறு துணை நடிகர்கள் தேவை என்று சொன்னால் ஐம்பது பேர் போதுமே? என்பார்கள். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மன்னுஇ இதுவரைக்கும் படத்திற்கு என்ன தேவையோ அதற்கு ஃபுல் சப்போர்ட் செய்து வருகிறார். இதனாலேயே அவருக்கு நான் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி’ என்றார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் பேசுகையில்,‘செய் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். இயக்குநர் மலையாளத்தில் பல படங்களை இயக்கியவர். கடின உழைப்பாளி. திரைக்கதை எழுதிய ராஜேஷ், என்னிடம் கதையை சொல்லும் போது தமிழில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, முழுவதும் மலையாளத்திலேயே சொல்லி முடித்தார். அதன் பிறகு யார் இதில் லீட் ரோல் செய்கிறார்கள் என்று கேட்டபோது, நகுல் என்று சொன்னார்கள். உடனே நான் பொருத்தமான தேர்வு என்றேன். துறுதுறுவென இருக்கும் கேரக்டர் அது. நகுலுக்கு இந்த படம் ஒரு மைல்கல் தான். ஹீரோயின் ஆஞ்சலுக்கு இது முதல் படம். ஆனாலும் முதல் படம் இல்லாமல் நல்ல அனுபவமிக்க நடிகையைப் போல் நடித்தார். தயாரிப்பாளர் மன்னு, படத்திற்காக நிறைய நேரங்களில் கமர்சியலாக சிந்திக்காமல், கிரியேட்டீவ்வாக சிந்தித்து சின்ன சின்ன ஐடியாக்களைக் கொடுத்து, இந்த படைப்பை தரமானதாக உயர்த்திருக்கிறார். இதனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பை ஊடகங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆதரவு தாருங்கள்.’ என்றார்.
படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா பேசுகையில்,‘ இந்த படத்தின் கதையை ராஜேஷ் மலையாளத்தில் சொல்லியதால், நான் சில வார்த்தைகளை மலையாளத்தில் பேசக் கற்றுக்கொண்டேன். அத்துடன் மலையாளத்தை புரிந்துகொள்ளவும் இந்த வாய்ப்பு பயன்பட்டது. இயக்குநருக்கும், திரைக்கதையாசிரியருக்கும் தமிழ் தெரியவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைத்தார்களோ அதனை துல்லியமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் மன்னு, இந்த படத்திற்காக பல விசயங்களை தேடி தேடி கொண்டு வந்து சேர்த்து அருமையான படமாக உருவாக காரணமாகயிருந்தார். இது போல் ஆர்வமான தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு வரவேண்டும்.என்றார்
நடிகை சந்திரிகா ரவி பேசுகையில்,‘ நான் ஆஸ்திரேலியாவில் பிறந்தேன். அமெரிக்காவில் தங்கி வேலை செய்கிறேன். இங்கு வந்து தங்கி, படத்தில் பணியாற்றுவதற்கு முதலில் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் காட்டிய அக்கறையும், அன்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த படத்தில் அனைத்து வகையான உணர்வுகளும் இடம்பெற்றிருக்கிறது. இது ரசிகர்களுக்கு பிடிக்கும். அதனால் அனைவருக்கு இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்.’ என்றார்.
நடிகர் வெங்கட் பேசுகையில்,‘ இது எனக்கு முதல் மேடை.ராஜேஷ் கே ராமன் தான் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்தார். ஆடிசன் கூட செய்யவில்லை.இருந்தாலும் என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார், அதற்காக அவருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படபிடிப்பின் போது ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் உடனே இயக்குநர் பாராட்டுவார். இது எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.’ என்றார்.
நடிகை யமுனா பேசுகையில்,‘ நீண்ட இடைவெளிக்கு பிறகு இது போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். ராஜேஷ் சார் தான் இந்த கேரக்டரை நீ தான் செய்யவேண்டும் என்று சொன்னார். வித்தியாசமான கேரக்டர்.’ என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் பேசுகையில்,‘செய் போன்ற திரைப்படங்கள் வெற்றிப் பெறுவது தமிழ் சினிமாவிற்கு நல்லது. மாநிலம் கடந்து, நாடு கடந்து, மொழி கடந்து உள்ளவர்கள் தமிழ் சினிமாவை நம்பி முதலீடு செய்கிறார்கள். வளரும் கலைஞர்களை வைத்து படம் தயாரிக்கும் புதுமுக தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த பணத்தை இன்வெஸ்ட் செய்திருக்கிறார்கள். இவர்களின் படங்கள் பெரும்பாலும் விற்பனையாவதில்லை. அட்வான்ஸ் கிடைப்பதில்லை. மார்க்கெட் பைனான்ஸ் கிடைப்பதில்லை.
நம்முடைய திரைத்துறையில் வாரத்திற்கு ஐந்து படங்கள் வரை வெளியாகிறது. இதில் இரண்டு அல்லது மூன்று படங்கள், இரண்டு முதல் ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்து புதுமுக தயாரிப்பாளர்கள் திரைத்துறைக்கு வருகிறார்கள். இந்த முதலீடு நம்முடைய கலைஞர்களுக்காகவும், தொழில்நுட்ப கலைஞர்களுக்காகவும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. வேறு வேறு தொழிலில் வெற்றிப் பெற்றவர்கள் தமிழ் சினிமாவை நம்பி முதலீடு செய்திருக்கிறார்கள்.
ஒரு படத்தின் வெற்றி மூலம் அரசிற்கு ஜி எஸ் டியாகவும், வருமான வரியாகவும் கோடி கணக்கிலான தொகையை செலுத்துகிறோம். நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் ஒரு படத்திற்கு பல்வேறு வகையிலான வரிகள் மூலம் தயாரிப்பாளர்கள் கோடி கணக்கிலான ரூபாயை வரியாக செலுத்துகிறார்கள். ஆனால் திரைத்துறை திருட்டு விசிடி மற்றும் பைரசியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை விட ஒரு படம் தயாராகி, தணிக்கையாகி, வெளியிடுவதற்கு சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை. இது தற்போது தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், ஒரு முன்னணி நடிகர்களின் திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்களில் திரையிட்டால் தான் வசூலிக்கமுடியும் என்ற மாயபிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒடும் திரையரங்குகளில் முப்பது நாற்பது ரசிகர்களுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம், தவறான புரிதல் தான். இதற்கு விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், தயாரிப்பாளர், ஊடகங்கள், ரசிகர் மன்றங்கள் வரை அனைவருமே காரணம். இதற்கு முன் ரசிகர்கள், தனக்கு விருப்பமான நடிகர்கள் நடித்த படம் இத்தனை கோடி வசூலானது என்று சொல்லித்திரிவார்கள். ஆனால் தற்போது தனக்கு விருப்பமான நடிகரின் படங்கள் இத்தனை ஸ்கிரீனில் வெளியாகிறது என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த ஸ்கிரீன் கவுண்ட் அதிகரித்துக் கொண்டே செல்வதால், சரியான படங்களுக்கு சரியான திரையரங்குகளும், சரியான ஸ்கிரீன்களும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதே சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது, கூட்டம் குறைவாக இருப்பதால் திரையரங்குகளில் கூட்டத்துடன் பார்க்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இதனால் ரசிகர்களிடம் படம் பற்றிய எண்ணங்கள் சரியான புரிதல் ஏற்படுவதில்லை. இதனால் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகள் கொண்ட திரையரங்குகளை உருவாக்குவதிலும் நடைமுறை சிக்கல் அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாரந்தோறும் தமிழ் சினிமாவை நம்பி கோடி கணக்கிலான ரூபாய் முதலீடு செய்யப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் அவர்கள் வெற்றிப் பெறுவது முக்கியமாகிறது.‘ என்றார்.
ஜாஸ் கண்ணன் பேசுகையில்,‘செய் என்ற டைட்டில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்குத்தான் பொருந்தும். இந்த படத்தின் அனைத்து விசயங்களையும் பர்ஃபெக்ட்டாக செய்து முடிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். புதுமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பெரிய அளவிற்கு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் வெளியீட்டை சக்தி பிலிம் பாக்டரிக்கு கொடுத்திருக்கிறார்கள். இது சரியான தேர்வு இதற்காகவும் வாழ்த்துகிறேன்.‘ என்றார்.
இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பேசுகையில்,‘எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன்.திரைக்கதை எழுதிய ராஜேஷ் சார் தான் என்னுடைய இசையைக் கேட்டு இந்த வாய்ப்பிற்காக பரிந்துரைத்தார். தயாரிப்பாளரும்,இயக்குநரும் கேட்டு எனக்கு வாய்ப்பளித்தார்கள். மெலோடி, சூஃபி, ஃபாஸ்ட் பீட்என கலவையான பாடல்களை கொடுத்திருக்கிறேன். சோனு நிஹாம், ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன்,பென்னி தயாள், ஆசிப் அலி போன்ற முன்னணி பாடகர்கள் என்னை போன்ற அறிமுக இசையமைப்பாளரின் ஆல்பத்தில் பாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு அனுமதியளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, யுகபாரதி, விவேக் ஆகியோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நா முத்துக்குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.‘ என்றார்.
நடிகை ஆஞ்சல் பேசுகையில்,‘எனக்கு இந்த திரைக்கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு சந்தோஷமடைந்தேன். செய் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் பணியாற்றுவதற்காக வாய்ப்பளித்த படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.‘ என்றார்.
தயாரிப்பாளர் மன்னு பேசுகையில்,‘ ராஜேஷ் இந்த படத்தின் திரைக்கதையைச் சொல்லும் போது எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு அருமையான குழுவினரை தயார் செய்தோம்.இது எனக்கு வித்தியாசமான அனுபவமாகயிருந்தது. இந்த படத்தின் மூலம் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கடுமையாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‘ என்றார்.
திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன் பேசுகையில்,‘ இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். தமிழில் திரைக்கதை எழுதவேண்டும் என்றவுடன் முதலில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிக்கான அகராதி ஒன்றை வாங்கி படித்தேன். அதன் பின்னர் தமிழில் கதையைச் சொல்ல முயன்ற போது, படத்தில் நடித்த அனைவரும், படக்குழுவினரும் தமிழில் சொல்லவேண்டாம், மலையாளத்திலேயே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டனர். மலையாளத்தில் பிரபலமான ஒரு பாடலின் பல்லவியே இப்படத்தின் சப்ஜெக்ட். மனதிற்கு பிடித்திருந்தால், அது நல்ல விசயம் என்றால், அதற்கு எந்த தடை வந்தாலும், அதனை எதிர்த்து செய்து முடி என்பதே இதன் கதை. ’ என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,‘இந்த படத்தில் ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் நிக்ஸ் புதுமுகமாக இருந்தாலும் அவரிடம் ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. அதனை அவர் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சூஃபி பாடலே சாட்சி. இது போன்ற பாடலை கம்போசிங் செய்வது கடினம். அதனை நன்றாக செய்திருக்கிறார் நிஸ். இதற்கு யுகபாரதியின் வரிகள் வலிமை சேர்த்திருக்கின்றன. பாடகர் பாடிய விதமும் அருமை. பாடலாசிரியர் விவேக், ஒரு ஃபாஸ்ட் பீட் ராப் பாடலுக்கு தமிழில் வார்த்தைகளை எழுதியிருக்கிறார், அது சவாலானது. அதனை எளிதாக செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த படத்தில் நான் எழுதிய பாடலின் பின்னணியை இயக்குநர் விவரிக்கும் போது, ஒரு நடிகனுக்கும் இயக்குநருக்கும் உள்ள அன்னியோன்யம் போல் ஒரு காதலருக்கும் காதலிக்கும் இருக்கிறது என்றார். காதலியை இயக்குநராகவும், காதலனை நடிகராகவும் கற்பனை செய்து பாடல் எழுதியிருக்கிறேன். இதனை படமாக்கிய விதமும் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இந்த பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷலும், சோனு நிஹாமும் மொழியை சிதைக்காமல், சரியான உச்சரிப்புகளுடன் பாடியது, இந்த பாடல் மீது அவர்கள் காட்டிய அக்கறை தெரிகிறது. இந்த பாடல் பதிவின் போது மேற்பார்வையிட்ட கவிஞர் மீராவிற்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் நகுல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும். நடிகர்கள் நடித்தாலும் ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பின்னணியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு தூணாக இருந்த ராஜேஷ் கே ராமனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மொழியே தெரியாமல் ஒரு அகரமுதலியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு நீள படத்திற்கு வசனம் எழுதிய அந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.‘ என்றார்.
நடிகர் நகுல் பேசுகையில்,‘ ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் செய். இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் இருக்கும் படம் இது. படத்தின் இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால், முதலில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கம்போசிங் செய்த பாடலை கேட்டவுடனே நான் தீர்மானித்துவிட்டேன். இவர் வேற லெவலுக்கு உயர்வார் என்று தெரிந்தது. யுகபாரதி எழுதிய, ‘ஊரெல்லாம் என் கட்அவுட் நிக்குமே.. பேப்பரெல்லாம் என்ன அச்சடிச்சி விக்குமே..’ எனத் தொடங்கும் பாடல் ஒரு ஆக்டரா என்னோட பேவரைட். ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும் போது வியப்பாக இருந்தது. மனதிற்கு திருப்தியாக இருந்தது. இயக்குநர் ராஜ்பாபு சார் ஸ்பாட்டில் என்ன தேவையோ அதை மனதிற்குள்ளேயே எடிட் செய்து படமாக்கியது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டியது. படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவிற்கு வி ஐ பி கள் என்று யாருமில்லை. படக்குழுவினரும் ஊடகங்களும் தான் இங்கு வி ஐ பி. இதற்காகவும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.
இவ்விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்காட்சிகள் திரையிடப்பட்டன.
நடிகர்கள்
நகுல்
நாசர்
பிரகாஷ் ராஜ்
மனோபாலா
வெங்கட்
ஆஞ்சல்
சந்திரிகா ரவி
பசங்க சிவக்குமார்
மீரா கிருஷ்ணா
யமுனா
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு மன்னு உமேஷ்
திரைக்கதை வசனம் ராஜேஷ் கே ராமன்
கதை, இயக்கம் ராஜ்பாபு
ஒளிப்பதிவு விஜய் உலகநாத்
இசை நிஸ் லோபஸ்
படத்தொகுப்பு கோபிகிருஷ்ணா V.
கலை ஜனார்த்தனன்
சண்டை பயிற்சி ஸ்டன்னர் சாம்
பாடலாசிரியர் மதன் கார்க்கி
யுகபாரதி
விவேக்
ஸ்டில்ஸ் ஸ்ரீனி மஞ்சரி
மக்கள் தொடர்பு யுவராஜ்
வெளியீடு சக்தி ஃபிலிம் ஃபாக்டரி