தனஞ்செயன் தமிழ் சினிமாவின் பிக் பாஸ்.-ஆர்யா.

0

Loading

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார் தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்த கதையை எடுக்க முடியும் என்றேன். கார்த்திக் சாரை அணுக உதவியாக இருந்த இயக்குனர் கண்ணன் சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் கார்த்திக் சார், ஷூட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வருவார், அவர வச்சி எப்படி படத்தை எடுப்பீங்கனு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, அவர் அப்படிலாம் இல்லை, மிக வேகமாக படத்தை முடிக்க அவர் மிக முக்கிய காரணம். நான் கேட்டுக் கொண்டதால் வரலக்‌ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அவர் நடித்தது ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரம் என்பதால் ட்ரைலரில் அவரை காட்ட முடியவில்லை. என் குரு இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் நடித்தது என் பாக்கியம். மே 25ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
தனஞ்செயன் பாஸிடிவ்வான விஷயங்கள் அனைத்தையும் தன் படத்தில் முடிந்தவரை சேர்த்துக் கொள்பவர். எல்லா வழிகளிலும் படத்தின் வருவாயை கூட்டுபவர் தனஞ்செயன். அப்படி ஒரு கூடுதல் ஈர்ப்பாக சிவகுமார் மகள் பிருந்தாவை இந்த படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
70களில் பிறந்தவர்களுக்கு தான் தெரியும் மிஸ்டர் சந்திரமௌலியை பற்றி. கார்த்திக் சார் படங்களை பார்த்து தான் காதல்னா என்னனு கற்றுக் கொண்டோம். தனஞ்செயன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்கள் குடும்பத்தில் முக்கியமான விஷயங்களை அவர் தான் செய்திருக்கிறார். என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கார்த்திக் சாரோடு இணைந்து நடித்தது என் பாக்கியம். அவரின் எனர்ஜி எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும். கௌதம் கார்த்திக்குக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றார் நடிகர் சூர்யா.
டிக்கெட் கிடைக்காமல் பிளாக்கில் டிக்கெட் வாங்கி திரும்ப திரும்ப நான் பார்த்த ஒரு படம் மௌனராகம். அப்படி பார்த்த கார்த்திக் சார் இன்றும் அப்படியே தான் இருக்கிறார். இவன் தந்திரன் பார்ட் 2 எடுத்தால் கார்த்திக் சார் தான் ஹீரோ என்றார் இயக்குனர் கண்ணன்.
எந்தவொரு நடிகருக்கும் ஒரு சில படங்கள் தான் அவர்களை நடிகனாக நிலைநிறுத்தும். அப்படி கௌதம் கார்த்திக்குக்கு இந்த படம் நிச்சயமாக அமையும். ரொம்ப எமோஷனல் படம். கடைசி 15 நிமிடங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இயக்குனர் சுசீந்திரன்.
தனஞ்செயன் மிகச் சிறந்த ஒரு தயாரிப்பாளர். பணம் இருக்கறவங்க எல்லாம் தயாரிப்பாளர் கிடையாது. எந்த படத்துக்கு, என்ன பட்ஜெட், எப்படி படத்தை கொண்டு செல்லணும்னு தெரிந்த ஒருவர் தான் தயாரிப்பாளர், அந்த வகையில் இந்த படத்தை குறிப்பிட்ட நேரத்தில் மிக அழகாக கொண்டு வந்திருக்கிறார் என்றார் இயக்குனர் அறிவழகன்.
தனஞ்செயன் தமிழ் சினிமாவின் பிக் பாஸ். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. எல்லாவற்றையும் மிகச்சரியாக செய்யும் ஒரு தயாரிப்பாளர். படத்தை குறித்த நேரத்தில், சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார் திரு என்றார் நடிகர் ஆர்யா.
ஹீரோவுக்கு மகனாக இருந்தால் ஜெயித்து விடலாம் என்று சொல்வது எல்லாம் பொய். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது வேண்டுமானால் எளிது, ஆனால் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. விஜய் சாரில் இருந்து பலருக்கும் இது பொருந்தும். அந்த வகையில் கௌதம் கார்த்திக் தனது கடின உழைப்பால் ஒரு ஹீரோவாக வளர்ந்திருக்கிறார் என்றார் நடிகர் சதீஷ்.
ஸ்கிரீனிலும் சரி, ரியல் லைஃபிலும் சரி ஹீரோவாக வலம் வருபவர் விஷால் சார். தமிழ் சினிமாவில் வெறுப்பே சம்பாதிக்காத ஒரே நடிகர் கார்த்திக் சார் தான். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். எந்தவொரு நடிகரையும் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்தி விடக் கூடாது என்று நினைத்து, நான் எழுதிய சில வரிகளை கூட மாற்ற சொல்லி விட்டார் கார்த்திக் சார். அவரின் நல்ல மனதை அது காட்டுகிறது என்றார் பாடலாசிரியர் விவேக்.
விக்ரம் வேதா படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சும்மா ஏனோதானோவென படங்களை ஒப்புக் கொள்ளகூடாது என்ற முடிவில் இருந்தேன். அந்த நேரத்தில் தான் தனஞ்செயன் சார் இந்த படத்துக்காக அழைத்தார், மரியாதைக்காக போய் சந்திக்கலாம் என்று தான் போனேன். கதையை கேட்டபிறகு தான் இதன் ஆழம் புரிந்தது. மௌனராகம் படத்தில் இளையராஜா சார் ஒரு தீம் இசையை அமைத்திருப்பார். அப்போது ஏன் இசை அப்படி இருந்தது என்று புரியவில்லை. ஆனால் அதன் அழுத்தம் மிகப்பெரியது. அதே போல இந்த படத்திலும் ஒரு தீம் இசையை அமைத்திருக்கிறேன் என்றார் சாம் சிஎஸ்.
தனஞ்செயன் சாரின் ஸ்டைல் மிகவும் பிடித்தது, அவரின் சரியான திட்டமிடல் புதிதாக இருந்தாலும் அது தான் சினிமாவுக்கு தேவை. கார்த்திக் சார் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார், அவருக்கு ஷூட் முடிந்தாலும் வீட்டுக்கு போக மாட்டார், அங்கேயே இருந்து ஷூட்டிங்கை கவனிப்பார். மகேந்திரன் சாருக்கு ஆக்‌ஷன் கட் சொன்னது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம் என்றார் இயக்குனர் திரு.
ஒரு சிறப்பான குழுவை இந்த படத்துக்காக ஒருங்கிணைத்திருக்கிறார் இயக்குனர் திரு.
அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு.
அப்பாவுக்கும், சதிஷுக்கும் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஆக்‌ஷன் மிக அதிகம், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்து என் மனதுக்குள் இருக்கும். அப்பா இதுபோல தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.
இந்த படம் ஒரு அழகான அனுபவம். மணிரத்னம் உருவாக்கிய ஒரு அற்புதமான படைப்பு அந்த சந்திரமௌலி. 150 படம் பண்ணின பிறகும் என்னை பற்றி சில பேரு ஏன் அப்படி சொன்னாங்கனு தெரில. 1981ல் நான் நடிக்க வந்தேன், அதில் இந்த படம் மிக முக்கியமான படம். கௌதம் தான் ஒரு கதை இருக்கு கேளுங்கனு சொன்னான், கதை கேட்ட பிறகு ரொம்ப பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. சிவகுமார் அவர்களை சித்தப்பானு தான் கூப்பிடுவேன், அவர்கள் குடும்பத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி எல்லோருடனும் நடித்து விட்டேன். இந்த படத்தில் சர்ப்ரைஸாக அவரது மகள் பிருந்தா பாடியிருக்கிறார். இயக்குனர் மகேந்திரன் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசையாக இருந்தது. இந்த படத்தின் மூலம் அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார் நவரச நாயகன் கார்த்திக்.
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்  சினிமாவின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பொறுமையாக வேலை நிறுத்தத்துக்கு நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் இந்திய சினிமாவே இன்று நம்மை திரும்பிப் பார்த்திருக்கிறது. தனஞ்செயன் சாரின் கச்சிதமான திட்டமிடலால் தான் இந்தப்படம் இவ்வளவு சரியாக வந்திருக்கிறது. மகேந்திரன் சார் பற்றி இந்த தலைமுறைக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. அவரை தற்போது நடிகராக பார்ப்பதும் மகிழ்ச்சி. திருவின் எல்லா படத்திலும் தண்ணீருக்குள் ஒரு பாடல் எப்படியாவது வந்து விடுகிறது. ஆனால் பார்க்க மிக அழகாக வந்திருக்கிறது” என்றார் நடிகர் விஷால்.
விழாவில் பாடகி பிருந்தா சிவகுமார், இயக்குனர்கள் கண்ணன், விஜய், அருண் வைத்யநாதன், சசி, ராதாமோகன், கௌரவ், எஸ் எஸ் ஸ்டான்லி, தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, ரகுநாதன், பி எல் தேனப்பன், மதன், நடிகர் விஜய் ஆண்டனி, ஷாந்தனு, சந்தோஷ் பிரதாப், இயக்குனர் பெரோஸ்,இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் பி கண்ணன்,தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, மைம் கோபி, விஜி சந்திரசேகர், மகேந்திரன், அகத்தியன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குனர் சுசீந்திரன், ரிச்சர்ட் எம் நாதன், கலை இயக்குனர் ஜாக்கி, எடிட்டர் சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்‌ஷ்மி, கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். ஜெகன் தொகுத்து வழங்கினார்.
 
 
 
Share.

Comments are closed.