905 total views, 1 views today
பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் ‘பியார் பிரேம காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளம் இயக்கும் இந்த படத்துக்கு தயாரிப்பாளரான யுவனே இசையமைக்கிறார். காதல் அம்சங்களோடு மிக வேகமாக உருவாகி வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒய்எஸ் ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக அடுத்த படத்துக்கும் தயாராகி விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் எமோஷன் மற்றும் டிராமாவாக உருவாகும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானது படத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது.
மாமனிதர் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் எங்கள் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். அவர் படத்துக்குள் வந்தது தான் மாமனிதன் தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. அவரின் மகன் என்பதை தாண்டி அவரின் ரசிகன் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். இசை என்ற கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதும், அவரின் மகனாக அவரது நெருங்கிய வட்டத்துக்குள் இருந்து கற்றுக் கொண்டதும் எனக்கு பெருமை. இப்போது ஒரு தயாரிப்பாளராக அவரை என் படத்துக்கு ஒப்பந்தம் செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அவரோடும், என் அண்ணன் கார்த்திக் ராஜாவுடனும் இணைந்து இசையமைப்பது என் இசைப்பயணத்தை அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றி இருக்கிறது என மகிழ்ச்சியோடு கூறுகிறார் யுவன் ஷங்கர் ராஜா.