நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘டியூப்லைட்’ படத்தை உருவாக்கி இருக்கின்றோம்”

0

 1,488 total views,  1 views today

திரையுலகை பொறுத்தவரை படைப்பாற்றல் என்பது மிக மிக முக்கியம். உலக சினிமா மூலம் தங்களின் ரசனைகளை வளர்த்துக்கொண்டே போகும்  ரசிகர்கள், தங்களின் எதிர்பார்ப்புகளையும்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர். அப்படி ஒரு தனித்துவமான கதையம்சத்தில் உருவாகி இருக்கின்றது,  ‘ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்ஷன்’ சார்பில்  ரவி நாராயணன் தயாரித்து, அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி நடித்திருக்கும் ‘டியூப்லைட்’  திரைப்படம்.
புதுமுகங்கள் இந்த்ரா – அதித்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ‘டியூப்லைட்’  திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், ‘டம்மி டப்பாசு’ புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் இந்த்ரா, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் (ராம்ஜியின் உதவியாளர்), படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம் (குற்றம் கடிதல்), கலை  இயக்குநர் uj முருகன் (மாலை நேரத்து மயக்கம்), நடன இயக்குநர் ஸ்ரீ கிரிஷ் (தினேஷ் மாஸ்டரின் உதவியாளர்), ஸ்டண்ட் மாஸ்டர் வின் வீரா (உறுமீன்) மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சின்னசாமி (மரியான்) ஆகியோர்  பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு தான் எங்களின் ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அந்த சமயத்தில் தான் இயக்குநர் இந்த்ரா, இந்த டியூப்லைட்  கதையோடு எங்களை அணுகினார். வித்தியாசமான நகைச்சுவை களம் என்பதால், படத்தின் கதையை கேட்டவுடன் எங்களுக்கு பிடித்துவிட்டது. நாங்கள்  எதிர்பார்த்ததை விட டியூப்லைட் திரைப்படம் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான ரவி நாராயணன்.
“ஒரு டியூப்லைட் பிரகாசமாக ஒளிர்வதற்கு குறைந்தது 3 முதல் 5 வினாடிகள் வரை தேவை. ஏறக்குறைய அதே குணாதிசயத்தை  தான் எங்கள் டியூப்லைட் படத்தின் கதாநாயகனும் பெற்று இருக்கிறார். சாதாரணமாக சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும், அவருக்கு ஐந்து வினாடிகள் கழித்து தான் கேட்கும். இது தான் டியூப்லைட் படத்தின் கதை கரு. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் சார் நடித்து இருக்கிறார். இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான பாண்டியராஜனை ரசிகர்கள் காண்பார்கள் என்பதை உறுதியாகவே சொல்லுவேன். நான் நகைச்சுவை ஜாம்பவான்கள் சார்லி சாப்ளின் மற்றும் மிஸ்டர் பீன்  ஆகியோரின் மிக பெரிய ரசிகன். ஆதலால், வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை யுக்தியை இந்த படத்தில் கையாண்டு இருக்கின்றேன். சமீப காலமாகவே இந்த வகையான நகைச்சுவை காட்சிகள் நம் தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. நிச்சயமாக எங்களின் டியூப்லைட் படம் உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை முறைக்கு புத்துயிர் கொடுக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் டியூப்லைட் படத்தின் கதாநாயகனும், இயக்குநருமான இந்த்ரா.
 
Share.

Comments are closed.