நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை – இயக்குநர் பா.இரஞ்சித்

0

Loading

பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற  தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.

 

இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள்,  மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் சில முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு  நிறைவேற்றப்பட்டன.

 

அந்த தீர்மானங்கள்:

  • சமத்துவ சமூகம் உருவாக கல்வி அனைவருக்கும் அடிப்படைத் தேவை. இதை உணர்ந்தே உலகிலுள்ள பல நாடுகளில், குறைந்தது மேல்நிலைப் பள்ளிக்கல்வி வரையிலுமாவது கட்டணமில்லா கல்வியை அரசு தன் பொறுப்பில் வழங்கி வருகின்றது. சிலநாடுகளில் பல்கலைக்கழக உயர்கல்வி கூட கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டில் மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே “கல்வி கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் அரசே உருவாக்கித்தர வேண்டும்” என வாதிட்டார்.

விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்குப் பின்னரும் அமைக்கப்பட்ட கல்விக்குழுக்கள் அரசின் பொறுப்பில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தன.

கல்வியை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும் என்பதே அண்ணல் அம்பேத்கரின் இலட்சியம். அதற்காகவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், அரசிற்கு வழிகாட்டும் நெறிமுறை பகுதியில் அரசின் பொருளாதாரம் மேம்பட மேம்பட கல்வியை குடிமக்கள் உரிமையாக்கி வழங்கிட வழி செய்தார் அண்ணல் அம்பேத்கர். (அர.சட்.பிரி.41)

மிகக்குறிப்பாக, 1966ல் கோத்தாரிக் கல்விக்குழு, பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி அனைவருக்கும் அரசு கல்வி வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இப்பரிந்துரை 1968 இந்தியக் கல்விக்கொள்கையிலும் இடம்பெற்றது.

இன்றைய தேதி வரை அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத் தரக்கூடிய பொதுப்பள்ளி முறைமையை (Common School System) நாம் உருவாக்கவில்லை. அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்றார் போல் கல்விகற்கும் சூழல் உருவாகி உள்ளது. பல அடுக்குக் கல்விமுறையில் (Multi Track School System)‘ பணமிருந்தால் வசதியான பள்ளி;  பணமில்லை என்றால் சுமாரான பள்ளி’ என்ற பாகுபாடு உருவாகி உள்ளது.

கல்வித்துறையில் இத்தகைய பாகுபாடுகள் நிறைந்துள்ள இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும், ஒரு அகில இந்தியத் தேர்வின் மூலம் தான் மாநில அரசின் மருத்துவக்கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமற்றது.   சமமற்றவர்கள் எவ்வாறு சமமானவர்கள் பங்கேற்கும் போட்டியில் பங்கேற்க இயலும். வாய்ப்பற்றவர்களை வாய்ப்புள்ளவர்களுடன் போட்டியிடு என்பது நியாயமாகுமா? இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் பங்கேற்கும் தேர்வில் வாய்ப்பற்ற ஏழை வீட்டுப்பிள்ளை பங்கேற்கச் சாத்தியமில்லாமல் தவிக்க விடுதல் நியாயமில்லை.

தகுதியில்லை,  திறமையில்லை என்பதால் போட்டியிட வேண்டாம் எனக் கூறவில்லை. வாய்ப்பு சமமாக இல்லை என்பதாலேயே இத்தகைய போட்டி கூடாது என்கிறோம்.

இந்தியாவின் சமமற்ற பிராந்திய சூழல் (Regional Imbalance) வேறுபட்ட பண்பாடு (Cultural Diversity), பல மொழிகளில் பயிலும் மாணவர்கள் (Linguistic Diversity) இவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைத் தேர்வுமுறையான ‘நீட்’ விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என இந்திய அரசை இக்கருத்தரங்கம் கோருகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தச்சட்டம் பிரிவு 10D இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் பொதுநுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தாலும், JIPMER,  AIIMS உள்ளிட்ட மத்திய அரசால் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்விலிருந்து எவ்வாறு இந்திய அரசு விலக்களித்துள்ளதோ, அதேபோல், தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கும் விலக்களிக்க வேண்டும் என இக்கருத்தரங்கம் கோருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அட்டவணை VII-ல், மூன்றாவது பட்டியலில் வரிசை எண் 25-ல் (Schedule VII, List III Entry 25) மாநில அரசிற்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் அச்சட்டம் அம்மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும்.

அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள இந்த அதிகாரத்தின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு என உச்சநீதிமன்றம் ‘மாடர்ன் பல் மருத்துவமனை’ வழக்கில் உறுதிபடக் கூறியுள்ளது.  மத்திய அரசிற்கு மட்டுமே அத்தகைய அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது எனவும், இதே வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

2016, மார்ச் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரம் குடும்பநலத்துறைக்கான துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை ஏற்க இயலாத மாநிலங்களுக்கு விலக்களித்திடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள அரசமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், நாடாளுமன்றநிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும் தமிழ்நாடுஅரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக 2017, பிப்ரவரி 18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவமாணவர் சேர்க்கை தொடர்பான இரண்டு சட்டமசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என இக்கருத்தரங்கு கோருகிறது.

  • இக்கருத்தரங்கத் தீர்மானத்தை இணைத்து இக்கருத்தரங்கில் பங்கேற்கும் பல்துறை சான்றோர்கள் மற்றும் பலரிடமும் கையொப்பம் பெற்று முறையான மனுவை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் நீலம் பண்பாட்டு மையம் வழங்குவது எனவும் இக்கருத்தரங்கம் தீர்மானிக்கிறது.
  • மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில், அரசுப்பள்ளியில் அதிலும் குறிப்பாக தாய்மொழி வழியில், பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டத்தை இயற்றிட தமிழ்நாடு அரசை இக்கருத்தரங்கம் கோருகிறது.
  • கல்வியை சந்தையிடம் ஒப்படைத்திட வழி செய்யும் உலக வர்த்தக அமைப்பு (WTO) பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா விலகிக் கொள்ள வேண்டும், தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கிட அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன் தேவைக்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களை அரசே தொடங்கி அரசின் பொறுப்பில் நடத்திட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கம் மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறது.

 

இந்த கருத்தரங்கில்
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர்,பேராசிரியர். அனில் சட்கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர், பேராசிரியர் எம்.நாகநாதன், SBOA பள்ளிகளின் தாளாளர், தாமஸ் பிராங்கோ, இயக்குநர் பா.இரஞ்சித், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் C.S. ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ஜே.அமலோற்பவ நாதன், மருத்துவர் அனுரத்னா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், பொறியாளர், எழுத்தாளர் பி.கே.ராஜன், தமிழ்நாடு கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பினை சார்ந்த பேராசிரியர் என்.மணி, நாடகவியலாளர் பிரளயன், மருத்துவர் எஸ்.காசி, மருத்துவர் எழிலன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். C. லட்சுமணன், பெங்களுரு இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு மாணவர் S.ஸ்ரீநாத், தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த CVMP எழிலரசன், தலித் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த A.பிரான்சிஸ், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த பழவேற்காடு M.அ,ன்சாரி, முற்போக்கு மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பாரதி பிரபு, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த V.மாரியப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினை சேர்ந்த S.தினேஷ், திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், முன்னாள் துணைவேந்தர் V.வசந்திதேவி, அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் G.ஹரகோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த K. சாமுவேல்ராஜ், தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் சார்பாக P.B.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share.

Comments are closed.