தொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருதுகள். இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் ஹாலில் நடந்தது.
விண்ணப்பித்திருந்த பல ஆயிரம் பெண்களில் இருந்து 150 பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டெர்லின் நித்யா, உமா சுப்ரமணியம், பிரியா ஆகியோர் இணைந்து விழாவுக்கான தீம் இசையை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்வாதி என்பவர் ட்ராஃபியை வடிவமைத்திருக்கிறார்.
விழா ஸ்டுடியோ 6 நடன குழுவினரின் ஃபியூஷன் நடன நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இசைக்கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து புதுமைப்பெண் என்ற இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
பெண்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இந்த விழாவை நடத்த குமரவேல் பெரிதும் உதவியாக இருந்தார். இதே மாதிரி விருது வழங்கும் விழாவை அடுத்து மும்பையில் நடத்த இருக்கிறோம். எம்எஃப் ஹுசேன் அவர்களின் பேத்தி எங்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறார் என்றார் ஹேமசந்திரன்.
இந்த ஐடியாவை ஹேமசந்திரனிடன் சொன்னேன். ஆண், பெண் இருவரும் இரண்டு சிறகுகளை போன்றவர்கள். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டாலும் இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பெண் பிரதமர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார். திருமணம், குழந்தைகள் தான் பெண்களின் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை தாண்டி சாதித்து வரும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றார் குமரவேல்.
விழாவில் ஜூரி உறுப்பினர்கள் அருணா சுப்ரமணியம், திவ்யதர்ஷினி, நளினா, மரியா ஜான்சன், பூர்ணிமா ராமசாமி, ஹேமா ருக்மணி, ரோஹிணி மணியன், வீணா குமரவேல், சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளையும் வழங்கினர்.
என்னை பற்றி தெரிந்து கொள்ள இவர்கள் எல்லோரும் ஒரு காரணமாக இருந்தனர். 65 வயதிலும் ஏதாவது செய்ய வேண்டுன் என நினைக்கிறார்கள். சமூக பொறுப்போடு அந்த சுய தொழிலை செய்கிறார்கள். அவர்களை சந்தித்தபோது அழுது விட்டேன். விருது கொடுத்து அனுப்புவதோடு முடியவில்லை. அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவது தான் நோக்கம். உன்னால் முடியுமா? என்ற சந்தேக பார்வையை தாண்டி எல்லோரும் ஜெயித்து இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே இன்ஸ்பிரேஷன். இந்த விழாவுக்கு பின்புலமாக இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி என தங்கால் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் ஜூரி குழுவினர்.
பூங்கொடி, ரம்யா, ஜெனிஃபர் ஆகியோருக்கு ஆரி மற்றும் அருணா சுப்ரமணியம் ஆகியோர் விவசாயத் துறைக்கான விருதுகளை வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது சந்திரா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது.
சாப்பாடு இல்லாமல் யாருமே வாழ முடியாது. ஆர்கானிக் உணவுகளை நான் நான்கு வருடங்களாக கற்றுக் கொண்டு வருகிறேன். நாம் சாப்பிடும் உணவில் எல்லாமே விஷமாகி விட்டது. இயற்கை உணவுகளை மறந்து விட்டு எங்கேயே போய்க் கொண்டிருக்கிறோம். மரபணு மாற்ற கடுகு வரப்போகிறது. அது வந்து விட்டால் இனி ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது சாத்தியமல்ல. நல்ல உணவுகளை நாம் சாப்பிட, நாட்டு விதைகளை காப்பாற்ற வேண்டும். ஆகஸ்டு 26ஆம் தேதி நாத்து நட்டு கின்னஸ் சாதனை செய்ய இருக்கிறோம். அதன் போஸ்டரை கமலஹாசன் வெளியிட இருக்கிறார். வெள்ளை சர்க்கரை, வெள்ளை மைதா, தூள் உப்பு ஆகியவற்றை உபயோகிப்பதை நிறுத்துங்கள் என்றார் நடிகர் ஆரி.
வித்யா பாலாஜி, நித்யா சேகர், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் ஹெல்த்கேர் பிரிவில் இயக்குனர் அறிவழகன் விருதுகளை வழங்கினார்.
நான் இயக்கிய நான்கு படங்களில் இரண்டு படங்கள் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான். பெண்கள் உள்ளுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்த இந்த அமைப்புக்கும் வாழ்த்துக்கள் என்றார் இயக்குனர் அறிவழகன்.
பிரேக்கிங் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் ஜெனிஃபர் ஆன், ஐஸ்வர்யா, ரேவதி ஆகியோருக்கு குமரவேல் மற்றும் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் விருதுகளை வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது கவிதாலயா புரொடக்சன்ஸ் புஷ்பா கந்தசாமிக்கு வழங்கப்பட்டது.
பாரதிதாரை பார்த்தால் என் அப்பாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எல்லா படங்களிலும் பெண்களை முன்னிறுத்தி படங்களை எடுத்தார். ஒரு கட்டத்தில் கவிதாலயாவை கவனிக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்தார். பெண்களுக்கு மிகவும் முன்னுரிமை கொடுத்ததற்கு என் அத்தைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்றார் புஷ்பா கந்தசாமி.
ஸ்போர்ட் & ஃபிட்னஸ் விருதுகளை வனிதா, பிரவீணா விஜய், சுதா ஆகியோருக்கு சுகாசினி மணிரத்னம் மற்றும் ரோஹினி மணியன் வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது காயத்ரி ராஜனுக்கு வழங்கப்பட்டது.
இத்தனை பேரின் உழைப்பையும் பார்க்கும் போது சந்தோஷமாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது. மெய் சிலிர்க்கிறது. என் குடும்பத்தில் எல்லோருமே ஃபிட்னஸ் உடையவர்கள் தான். என்றார் நடிகை சுகாசினி.
ரேச்சல், திரிபுர சுந்தரி, ஸ்வாதி ஆகியோருக்கு சுய உதவி பிரிவில் மாஃபா ஹேமலதா மற்றும் & சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
பல பெண்கள் நிறைய வேலைகளை செய்கிறார்கள், ஆனலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் சரியாக கிடைப்பதில்லை, இந்த விருது சரியான அங்கீகாரம் என்றார் மாஃபா ஹேமலதா.
ப்ரீத்தி விஜய், சப்னா கோஷி, லக்ஷ்மி ஆகியோருக்கு கலை மற்றும் கலாச்சார பிரிவில் விருதுகளை வழங்கினார் அருணா சாய்ராம். லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோருக்கு இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது.
குடும்பத்தலைவராக ஒரு பெண்மணி இருப்பதற்கே சிஇஓக்கு உண்டான தகுதிகள் வேண்டும். அதையும் தாண்டி மிகப்பெரிய சாதனைகள் செய்வது மிகப்பெரிய விஷயம். அப்படி சாதனை செய்தவர்களுக்கு நான் விருது வழங்கியது என் பாக்கியம் என்றார் அருணா சாய்ராம்.
ராஜலக்ஷ்மி, சரோஜா, ஹேமா கிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் சீனியர் சிட்டிசன் விருதை ஷோபா சந்திரசேகர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் வழங்கினர். ஃபுட் கிங் சிஇஓ சரத்பாபு அவர்களின் அம்மா தீபாரமணி அவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது.
என் அம்மா 5 குழந்தைகளையும் வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல எல்லா தொழில் அதிபர்களும் குடும்பத்தில் பெண்கள் செய்யும் சுய தொழில்களில் இருந்து தான் உருவாகிறார்கள் என்றார் சரத்பாபு.
ஹெட்வே ஃபவுண்டேஷன் ராகவி செந்தில்குமாருக்கு சிறப்பு விருதை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் பேசும்போது, “வளரும் இந்தியா இளைஞர்கள் மற்றும் பெண்களின் கைகளில் இருக்கிறது. அவர்களின் அறிவு, திறமை எல்லாம் ஒன்றுபடும் போது தான் இந்தியா வல்லரசு ஆகும். ஆதிகாலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதனால் தான் இந்தியா பின் தங்கி இருப்பதாக நினைக்கிறேன். இது அறிவின் யுகம், உடல் வலிமை பின்னுக்கு தள்ளப்பட்டு அறிவின் வலிமையால் ஆணுக்கு பெண் சமமாகவும், ஆணை விட அதிகமாகவும் சிந்திக்கிறார்கள். பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழியை நான் எதிர்க்கிறேன். பின்னால் வருவதை முன்பே அறிவது தான் பெண் புத்தி என்றே நான் சொல்வேன். இந்த நவீன உலகத்தில் பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உலகத்தில் மிகச்சிறந்த மூலதனம் நேரம். எதை இழந்தாலும் திரும்ப பெற முடியும். மானம், உயிர், நேரம் ஆகியவற்றை மட்டும் இழந்தால் திரும்ப பெற முடியாது. நேரத்தை ஏன் தொலைக்காட்சி, அலைபேசி என தொலைக்க வேண்டும். இந்த மாதிரி விருதுகள் கொடுப்பது சிறப்பான விஷயம். இந்த விழாவில் ஆண்களுக்கு தான் 33 சதவீதம் இடம், மீத இடத்தை பெண்கள் தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றார்.
விஜய பாரதி , தீபிகா, வாமனி, இந்திரா ஆகியோருக்கு கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் விருதுகளை வழங்கினார் நடிகர் அருண் விஜய்.
ஒவ்வொரு கணவனும், குடும்பமும் பெண்களுக்கு பின்னால் இருக்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் அருண் விஜய்.
ஷீத்தல், சௌந்தரி, சௌம்யா ஆகியோருக்கு மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் பிரிவில் தன்வி ஷா மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
ஷீலா பாபு, ஆறுமுக கனி, கதீஜா பீவி ஆகியோருக்கு உணவுத்துறையில் விருதுகளை வழங்கினர் லீனா மற்றும் ஷிவ்ராஜ் ராமநாதன். இன்ஸ்பிரேஷன் விருது பட்ரீஷியாவுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் ரிங்கு பால் எழுதிய மில்லியனர் ஹவுஸ்வைவ்ஸ் என்ற புத்தகத்தை சுரேந்திரன் மற்றும் மரியா ஜான்சன் ஆகியோர் வெளியிட்டனர்.
ரச்சனா, கவிதா, காவியா ஆகியோருக்கு பியூட்டி, வெல்னஸ் பிரிவில் மீனா குமாரவேல் மற்றும் இனியா ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
இந்த விருதுகளை தவிர சத்யபாமா பல்கலைக்கழகம், க்ளொபல் அட்ஜஸ்ட்மெண்ஸ், நேச்சுரல்ஸ், நேடிவிடி ஃபவுண்டேஷன், பூமிகா ட்ரஸ்ட் சார்பில் 18 பேருக்கு தொழில் முதலீடும் வழங்கப்பட்டது.
விழாவை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.