சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பக்திகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்ப திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது. தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல இண்டஸ்ட்ரி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சதீஷுடன் நடிக்கும்போது அவர் செய்யும் காமெடிகளில் சிரிக்காமல் இருப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. பிஜாய் என்னை தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். படத்தை பற்றி கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நாங்கள் நிறைய விவாதிப்போம் என்றார் நாயகன் துல்கர் சல்மான்.
மேடையில் இருக்கும் எல்லோருடைய பெயரையும் சரியாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. துல்கர் நல்ல நடிகர் என்பது தெரியும், ஆனால் இந்த படத்தில் நான்கு விதவிதமான கெட்டப்புகளில் மிகவும் வித்தியாசப்படுத்தி நடித்திருக்கிறார். பிஜாய் திறமையான இயக்குனர், சிறப்பாக படத்தை எடுத்திருக்கிறார். இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது, முழுக்க முழுக்க தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய் என அழுத்தி சொன்னார் நடிகர் சதீஷ்.
ரெமோ படத்துக்கு பிறகு எனக்கு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்த படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்த படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன் என்றார் நடிகர் அன்சன் பால்.
இந்த படத்தில் நான்கு கதைகளில் வேர்ல்ட் ஆஃப் சிவா என்ற பகுதியில் ருக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ருக்கு மாதிரியே இந்த படத்தில் வரும் எல்லா பெண் கதாபாத்திரங்களுமே வலிமையானவை. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. நானும் ஒரு ரசிகையாக இந்த படத்துக்காக காத்திருகிறேன் என்றார் நாயகி ஸ்ருதி ஹரிஹரன்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்த ‘சோலோ’ படத்தின் மூலம், அதுவும் துல்கர் சல்மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. இந்த படத்தின் இசை மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ரோஷோமான் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். இப்போது தான் தமிழை கற்றுக் கொண்டிருக்கிறேன், எல்லோருக்கும் நன்றி என்றார் நாயகி நேஹா ஷர்மா.
மகாராஷ்டிராவில் துல்கர் சல்மானுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் இந்தி படங்களிலும் நடிக்க வேண்டும், இந்தி சினிமாவுக்கு அவரை வரவேற்கிறோம். படத்தை பார்த்து உங்களுக்கு பிடித்தால் மட்டும் எழுதுங்க என்றார் நடிகை சாய் தம்கங்கர்.
நீண்ட நாட்கள் கழித்து இரு மொழிகளில் தயாரான இந்த ‘சோலோ’ என்ற படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘புதிய முகம்’ படத்தை நான் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அந்த படத்தை இயக்கிய சுரேஷ் சந்திர மேனன் இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை. சாய் மராத்தி சினிமாவில் பெரிய நடிகை, அவரை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததே பெரிய விஷயம். நான்கு நாயகிகள் உட்பட பல மொழி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம். கதை சொல்லலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் ஒரு முயற்சி. தமிழ், மலையாளம் ரசிகர்கள் சிறந்த, புது முயற்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை பற்றிய உங்களின் எல்லா விமர்சனங்களையும், பாராட்டுகளையும் வரவேற்கிறோம் என்றார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.
இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் அனில் ஜெயின், நடிகர் சுரேஷ் சந்திர மேனன், நாயகி ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.