Tuesday, February 17

பிரபலங்களின் உறுதுணையால் வலிமை பெரும் டான் பாஸ்கோவின் “வா தமிழா”!

Loading

ஆல்பம் பாடல்களை உருவாக்குதல் என்பது எளிதான காரியம் ஒன்றும் இல்லை. தனிப்பாடல்களுக்கு தேவையான கருவை தேடிப் பிடிப்பதும், அதனை காட்சிப் படுத்துவதும் என்பது உள்ளபடியே மிகவும் சவாலானது. அதிலும் கூரிய சமுதாய அக்கறையுடன், தான் கொண்ட கனவை வெளிப்படுத்தும் விதமாக ஆல்பம் தயாரிப்பது மேலும் சவாலைத் தரக்கூடியது.

அப்படி தனது கனவினை, இந்த தமிழ்ச் சமூகத்தின் மீது கொண்டிருக்கிற காதலை “வா தமிழா” என்கிற ஆல்பத்தின் மூலமாக மக்களுக்கு காட்சிப்படுத்த வருகிறார் எடிட்டர் V. டான் போஸ்கோ. இவர் “சுந்தரபாண்டியன்”, “ இது கதிர்வேலன் காதல்” போன்ற வெற்றித் திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர். மேலும், “7 ஸ்டார் புன்னைநகர் அணி” படத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.

பல முக்கியமான பிரச்சனைகளை ஒட்டி பேசவிருக்கும் இந்த வீடியோ ஆல்பத்தை “ஜாஸ் ஸடுடியோஸ்” சார்பில் தயாரித்திருக்கிறார் W.M.கமலா ராகவன் (வாலஜாபேட்டை).E.J.ஜான்சன் வரிகள் எழுதி, இசையமைக்க இப்பாடலை பாடியிருக்கிறார் “மெர்சல்” தீபக். ஒளிப்பதிவாளராக அருண் பிரசாத்தும், கலை இயக்குநராக சுராஜும் பணிபுரிந்திருந்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக, இயக்குநர் S.R.பிரபாகரன் முன்னுரை வழங்கியிருக்கிறார்.

இந்தப் பாடலை, எப்போதுமே தமிழர்களின் உரிமைகளுக்காக ஒலிக்கும் முதல் குரலாக இருக்கக் கூடிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் சேர்ந்து இசையமைப்பாளர்கள் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சி.சத்யா ஆகியோர் ஒரே நேரத்தில் வெளியிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இந்த “வா தமிழா” ஆல்பத்தை இயக்கி, நடித்ததற்கான காரணம் பற்றி எடிட்டர் V. டான் போஸ்கோ கூறும் போது,

“உண்மையை சொல்லப்போனால் இது எனது நீண்டநாள் கனவு. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் “உந்தன் தேசத்தின் குரல்”, “வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே” மற்றும் “விடைகொடு எங்கள் நாடே” போன்ற பாடல்களைப் பார்த்த பிறகு தான் எனக்குள் இந்த ஆசை வேர்விட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான நேரம் கிடைக்காமலேயே காலம் தாழ்த்த வேண்டியதாகி விட்டது. இப்போது இருக்கிற அரசியல் சூழலில் தமிழர்களுக்கான ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானதாக தோன்றியது. காரணம், நம் முந்தைய சந்தததியினர் செய்து வைத்த நன்மைகளைக் கொண்டு தான் நாம் இப்போது வரை வாழ்ந்து வருகிறோம். நாளைய தலைமுறைக்கென்று நாம் இங்கு எதையுமே இதுவரை செய்து வைக்கவில்லை. கூடவே, தூத்துக்குடி தமிழ்நாட்டில் நிகழும் வரிசையான அரசியல் நெருக்கடியில் தமிழன் சிக்கித் தவிக்கிற இந்த சூழலில் “யார் தொடங்க யார் முடிக்க?” என்கிற இந்த பாடல் மாற்றத்திற்கான ஒரு விதையாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் பெரும் ஏக்கத்தோடு.