சேவைத் தொழில்கள் பலவும் இருக்கலாம். ஆனால் அவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் மனிதவள மேம்பாட்டுத் துறை என்றால் மிகையாகாது.
வேலை தேடுவோர் ஒருபுறம் லட்சக்கணக்கில் பெருகி நிற்க, நிறுவனங்களுக்கு திறமை மிக்க பணியாளர்கள் கிடைக்காமல் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் நிறுவனங்களும் அதற்கிணையாகத்தான் இருக்கின்றன. இந்த இரண்டையும் இணைக்கும் அற்புதமான புள்ளிதான் இன்டர்வ்யூ டெஸ்க்.
இதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜனின் மனைவி திருமதி லதா, தங்கள் நிறுவனத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சுவைபட பகிர்ந்து கொண்டார்.
மாஃபாவை நாங்கள் ஆரம்பிக்கும் காலகட்டத்தில் மனிதவள மேம்பாடு என்ற துறையே பலருக்கும் அந்நியமாகத்தான் இருந்தது. வங்கியில் கடன் கேட்கப் போனால், மேலாளரே நீங்கள் இரண்டு மாடு வாங்கி தொழில் செய்யப்போகிறேன் என்றால்கூட கடன் கொடுக்க முடியும். மனிதவள மேம்பாடு என்று சொல்லி ஓவர் ட்ராப்ட் கேட்டால் எப்படி கொடுக்க முடியும் என்றுதான் கேட்டார். காரணம் அன்றைய நிலை அப்படி இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி நாங்கள் வெற்றி பெற்றோம் என்றால் அதற்குக் காரணம் எங்கள் நிறுவனத்தை நாங்கள் ஆர்கனைஷேனாகக் கருதவில்லை. அதை இன்ஸ்டிட்யூஷனாகத்தான் கருதினோம் என்றார் திருமதி லதா பாண்டியராஜன்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் முதல் முறையாக சென்னைக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்து முதல்கட்டத் தேர்வை முடித்து ஒரு மாதமாகியும் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாததால் ஊருக்குத் திரும்பியதையும், அங்கு சென்ற பிறகு இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைப்பு வந்ததையும் விவரித்து இன்டர்வ்யூ டெஸ்க் போன்ற நிறுவனத்தின் அவசியத்தை அழகாக வலியுறுத்தினார்.
இன்டர்வ்யூ டெஸ்க் நிறுவனர் பிச்சுமணி துரைராஜின் அர்பணிப்பு மிக்க உழைப்பு மற்றும் அவருடன் இணைந்து, நிறுவனத்தை இன்ஸ்டிட்யூஷனாக வளர்த்தெடுக்கும் முடிவுடன் உடனிருக்கும் குழுவினரைப் பார்த்தால் இவர்கள் மிகப் பெரிய உயரங்களைத் தொடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.