‘மாயநதி’ மாதிரி படங்கள் தான் வருங்கால இந்திய சினிமா

0

Loading

ட்ரீம் மில் சினிமாஸ் மற்றும் மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் குருவில்லா தயாரிப்பில் ஆஷிக் அபு இயக்கத்தில், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருக்கும் படம் ‘மாயநதி’. கிருஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பற்றிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா கூறும் போது, “மாயநதி எங்கள் நிறுவனத்தின் 6வது படம். ஆஷிக் அபுவுடன் இணைந்து படம் தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஸ்துமஸ் சீசன் என்பதால் தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையிலும் கூட 6 திரையரங்குகள் தான் கிடைத்திருக்கின்றன. ஆனால் படத்திக்கு கிடைக்கும் வரவேற்பால் திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புகிறோம்” என்றார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன், “இது என்னுடைய 28வது அடம். இவ்வளவு படங்கள் மூலம் எனக்கு கிடைத்த பேர், புகழை விட இந்த படத்தில் கிடைத்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் நான் நடிக்க காரணம் இணை இயக்குனர் பினு. இந்த மாதிரி நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். தயாரிப்பாளர் சந்தோஷ் மிகவும் எளிமையாக பழகக் கூடியவர். நல்ல படம் பண்ணா போதும் என்று நினைக்க கூடியவர். படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் கொடுத்த கதாபாத்திரத்தை மேலும் மெறுகேற்றி நடித்திருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் ஒரு காட்சியில் தான் நடித்தேன். இந்த மாதிரி ஒரு சிறந்த படம் கிடைத்தது அவரின் அதிர்ஷ்டம். தமிழிலும் அவர் படங்கள் நடிக்க வேண்டும். படத்தின் கதாசிரியர்கள், தயாரிப்பாளரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நிறைய பங்களிப்பு செய்தார்கள். இளவரசு சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழ் தெலுங்கு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் என்னை பார்த்திருப்பீர்கள். இந்த கதாபாத்திரம் நிச்சயம் எனக்கும், உங்களுக்கும் புதுமையாக இருக்கும். இதை எனக்கு அளித்த இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு நன்றி” என்றார்.
நடிகர் இளவரசு பேசும்போது, “மலையாள சினிமாவும், தமிழ் சினிமாவும் ரொம்ப அன்னியமில்லை. இந்த படத்தில் நடிக்க கேட்டு ஆஷிக் அபு ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். கதையை சொல்லி, உடனடியாக மதுரையில் ஷூட்டிங்கை ஆரம்பித்தார்கள். வேறொரு மொழி படத்தில் நடிக்க போன மாதிரியான உணர்வே இல்லை. ஆஷிக் அபுவின் படங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும். மிகவும் தைரியமாக காட்சிகளை வைக்கக் கூடிய ஒரு இயக்குனர். இந்த படத்தில் லைவ் ரெக்கார்டிங் முறையில் நடித்ததும் எனக்கு  ஒரு புது அனுபவம். எனது அன்றாட வாழ்க்கைக்காக நிறைய படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் நாம் நடிக்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் நமக்கு மனநிறைவை கொடுக்கும். அப்படி ஒரு படம் தான் மாயநதி. முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொள்ள தியேட்டருக்கு போகும்போது திக்திக்னு இருக்கும். தியேட்டரில் போய்  நாயகன், நாயகி கதாபாத்திரங்களை தான் மிகவும் ரசித்தேன். சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருந்து நடிகரான டொவினோ தாமஸ், இன்றைய தலைமுறை ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொண்டவர்” என்றார்.
படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கும் நாயகன் டொவினோ தாமஸ் கூறும்போது, “என் கேரியரில் 5 வருடங்களில் 20 படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் நடித்தது ஒரு சுவையான அனுபவம். நடிகர்களான எங்களையும் விவாதத்தில் அனுமதித்து, நடிக்கவும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். மும்பையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம். அதை முதலில் அமல் நீரட் குறும்படமாக பண்ண திட்டமிட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் அவர் அதை செய்யவில்லை. அதை ஆஷிக் அபுவிடம் சொல்ல அவர் படமாக உருவாக்கியிருக்கிறார். இந்த மாதிரி படங்கள் தான் வருங்கால இந்திய சினிமாவாக இருக்கும். எல்லா மொழிகளுக்கும் நியூ வேவ் படங்களை கொடுக்கும் போட்டி நடந்து வருகிறது. மக்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து மாயநதி படத்தை பார்த்தனர். இந்த நியூ வேவ் சினிமாவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மலையாள படங்களில் வரும் தமிழ் வசனங்களையும் மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சினிமாவுக்கு மொழி ஒரு தடையே இல்லை. சென்னையிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நானும் எல்லா தமிழ் படங்களையும் விடாமல் பார்ப்பவன் தான். தமிழில் அபியும் அனுவும் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தனுஷ் சாரின் மாரி 2 படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறேன்” என்றார்.

Share.

Comments are closed.