முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே வழங்கப்பட வேண்டும் – விஷால்

0

 287 total views,  1 views today

வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா அவர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011 இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தினார். 2016 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க சுமார் 21 லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண், பெண் முதியோர்களுக்கு மாதா மாதம் வழங்கப்பட்ட உதவி தொகை கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் வயதான காலத்தில் உதவி தொகை கேட்டு தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகிறார்கள்.
     குறிப்பாக ஆர்கே நகர் தொகுதியில் நேற்று முதியோர்கள் தங்களுக்கு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் உதவித்தொகையை கேட்டு சாலை மறியலும் உண்ணாவிரத போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். ஆர்கே நகர் தொகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட முதியோர்கள் உதவித்தொகை பெறுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. அவர்களுக்கு 5 முதல் 8 மாதங்கள் வரை உதவித்தொகை நிலுவையில் இருக்கிறது. அஞ்சல்துறை மூலமாக வழங்கப்பட்டு வந்த வரை இந்த பிரச்னை இல்லை. புரட்சித்தலைவி அவர்கள் தான் இந்த திட்டத்தின் முறைகேடுகளை தடுக்க வங்கி மூலம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் வங்கி மூலம் வழங்கத் தொடங்கியதில் இருந்தே பயனாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாரத்துக்கு ஒருநாள் வினியோகம், ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான் வர வேண்டும், மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தேக்கம் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
    பெண்களுக்கும் முதியோருக்கும் உறுதுணையாக இருந்தவர் புரட்சித்தலைவி அவர்கள். இனியும் நிலுவையில் வைக்காமல் தமிழக அரசு செவிசாய்த்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதியில் உறுப்பினராக பதவியேற்றிருக்கும் உயர்திரு. தினகரன் அவர்கள் அந்த தொகுதியில் இந்த உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
– விஷால்
Share.

Comments are closed.