குழந்தை வேலப்பன் இயக்கத்தில், கிருஷ்ணா – சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘யாக்கை’ திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது என்பதை உறுதிப்படுத்தினார், ‘யாக்கை’ படத்தின் தயாரிப்பாளரும், ‘பிரிம் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனருமான முத்துக்குமரன்.
“யாக்கை படத்தின் இறுதி பதிப்பை பார்த்தவர்கள், எங்களுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை அளித்துள்ளனர். உன்னதமான தொழிலாக அனைவராலும் கருதப்படும் மருத்துவ துறையில் நடக்கும் மோசடிகளை இந்த யாக்கை படம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.மருந்துகள் மீதும், மருத்துவத்தின் மீதும், குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்து ஏமாறும் மக்களுக்கு சிறந்ததொரு விழிப்புணர்வு திரைப்படமாக எங்களின் யாக்கை இருக்கும். இளைஞர்கள் பலர் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த நாட்களில் வெளியாகும் எங்களின் யாக்கை திரைப்படம், நிச்சயமாக மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் உள்ளங்களில் விதைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் யாக்கை படத்தின் இயக்குநர் குழந்தை வேலப்பன்.