விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசமான தலைப்பு…

0

Loading

‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, மற்றும் ‘எமன்’ ஆகிய பெயர்கள் யாவும், தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும்   விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் தலைப்புகள்.  குறுகிய காலத்தில், தென்னிந்திய திரையுலகின் வர்த்தக உலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் – கதாநாயகன் விஜய் ஆண்டனி. ரசிகர்களை கவரக்கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக்களம், என இந்த இரண்டும் ஒருங்கே இணைந்து இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதால், மொழிகளை கடந்து, தென்னிந்திய திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் தனித்துவமான சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுதான் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம், தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான ‘அண்ணாதுரை’ யின் பெயரை பெற்று இருக்கிறது.
வர்த்தக உலகில் வெற்றிகரமான கதாநாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘வித்தியாசமான தலைப்பு’ பாணி, இந்த ‘அண்ணாதுரை’ படத்திலும் தொடர்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
‘ஐ பிச்சர்ஸ்’ சார்பில் ஆர் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்கும் இந்த ‘அண்ணாதுரை’ படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்க இருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
“விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், ‘ஐ பிச்சர்ஸ்’ போன்ற மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். தலைச்சிறந்த தலைவர்களுள் ஒருவரான ‘அண்ணாதுரை’ யின் பெயரை தலைப்பாக கொண்ட இந்த படம், அவரின் வாழ்க்கையை சார்ந்து இல்லாமல், வேறொரு கதைக்களத்தில் உருவாக இருக்கின்றது. நிச்சயமாக எங்களின் ‘அண்ணாதுரை’, விஜய் ஆண்டனியின் ரசிகர்களையும், பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிகளவில் உற்சாகப்படுத்தும். தற்போது படப்பிடிப்புக்கான பணிகளில் நாங்கள் மும்மரமாக  ஈடுபட்டு வருகிறோம், இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் ‘அண்ணாதுரை’ படத்தின் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீனுவாசன்.
 
 
 
Share.

Comments are closed.