எந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில் முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும் ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர்.
தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் “அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் “அண்ணாதுரை” படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது. இப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த குடும்பபாங்கான ஜனரஞ்சக படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.
‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ” ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி. பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.