ஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த “100” திரைப்படம் இதற்கு போதுமான ஒரு சான்றாக உள்ளது. ஏனெனில் இந்த படம் குழுவில் உள்ள பலருக்கும் முதல்முறை என்ற குறிப்புடன் அமைந்தது. நகைச்சுவை திரைப்படங்களை இயக்குவதில் மிகவும் பிரபலமான இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தின் மூலம் ‘திரில்லர்’ படங்களையும் தன்னால் மிகச்சிறப்பாக கொடுக்க முடியும் என தன் முழுத்திறமைகளையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். மறுபுறம், மிகவும் அழகான அதர்வா முரளியை இதுவரை பார்த்திராத போலீஸ் கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தியது. தற்போது இத்திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்கள் என்ற முக்கியமான ஒரு அடையாளத்தை கடந்துள்ளது.
இயக்குனர் சாம் ஆண்டன் இது குறித்து கூறும்போது, “இந்த சீசன் என்னை மிகவும் மகிழ்ச்சியான மன நிலையிலேயே வைத்திருக்கிறது. ஒரு குழுவாக ஒன்றிணைந்து பணியாற்றிய பிறகு, “100” திரைப்படம் மிக இயல்பாகபே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பல வெள்ளிக்கிழமைகள், பல புதிய திரைப்படங்கள் வருகைக்கு பிறகும் தியேட்டர்கள் 100 படத்தை திரையிடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனக்கு, என்னுடைய வழக்கமான படங்களில் இருந்து வெளியேற நான் எடுத்த முதல் முயற்சி. ஆனால் அதர்வா முரளிக்கு இது புதியதல்ல. அவர் பல படங்களில் தன்னை ஒரு நடிகராக தனது அற்புதமான நடிப்பின் மூலம் நிரூபித்தவர். உண்மையை சொல்வதானால், இது அவரது திரை இருப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு ஆகியவை தான் படத்தின் தாக்கத்தை மேம்படுத்தியது. இந்த ஸ்கிரிப்ட் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து, அதை செயல்படுத்த முழு ஆதரவை வழங்கிய எனது தயாரிப்பாளர்கள் ஆரா சினிமாஸ் மகேஷ் சார் மற்றும் காவியா வேணுகோபால் மேடம் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். ஹன்சிகா மோத்வானி, யோகிபாபு மற்றும் படத்தில் நடித்த அனைவருமே பாராட்டத்தக்க நடிப்பை வழங்கினர். ‘த்ரில்லர்’ திரைப்படங்களின் பிரிக்க முடியாத ஆளுமையாகி விட்ட சாம் சி.எஸ். “100” திரைப்படத்திலும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்தை மேம்படுத்தினார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ரூபனின் கச்சிதமான படத்தொகுப்பும் இந்த படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த் ஜெயின் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிட்டது, மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்த்தது” என்றார்.
சாம் ஆண்டனின் மற்றொரு திரைப்படமான “கூர்கா” விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கூர்கா அதன் சிறப்பான இசை ஆல்பம் மற்றும் நகைச்சுவை நிறைந்த காட்சி விளம்பரங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.