Friday, August 28

ஹாய் திரைப்பட விமர்சனம்

Loading

ஹாய் திரைப்பட விமர்சனம்

காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் கவின் அம்மா அப்பாவிடம் கூட சொல்லாமல் சென்னைக்கு ஓடி வந்துவிடுகிறார்

தந்தை பிரபு பார்த்த மணமகனை பிடிக்காமல் திருமண நாள் அன்று சென்னைக்கு கம்பி நீட்டி விடுகிறார் நயன்தாரா.

இவர்கள் இருவரும் சந்திக்கின்றனர். ஆரம்பத்தில் சாதாரணமாகப பழகினாலும், இருவரிடையே ஒரு நட்பு ஏற்பட்டுகிறது.

இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யும் ஒரு விஷயம் விபரீதமான வடிவத்தில் அவர்களையே திரும்பத் தாக்குகிறது.

பிரச்சனையிலிருந்து தப்பிக்க நயன்தாராவும் கவினும் தாங்கள் இருவரும் காதலிப்பதாக பெற்றோர்களிடம் பொய் சொல்லுவதுடன், நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொள்ளாக்குகிறார்கள்.

எனவே இரண்டு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து இந்த ஜோடிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கின்றனர்.
இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ஹாய் திரைப்படம்.

உள்ளூர நயன்தாராவை காதலித்தாலும் அதை வெளிப்படுத்த தயங்கும் வேடத்தில் கவின் சோபிக்கிறார்.
நகைச்சுவை இயல்பாகவே அவருக்கு நன்றாக வருகிறது என்பதால் பல காட்சிகளை வெகுவாக ரசிக்க முடிகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ராஜேஷ் சுக்லாவின் வண்ணமயமான ஒளிப்பதிவுதான்.

ஜென்மார்ட்டின் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்ப்பதாகத்தான் அமைந்திருக்கின்றன.

கவின் அப்பா வேடத்தில் வரும் பாக்கியராஜ் கனகச்சிதமாக அந்தப் பாத்திரத்துக்கு பொருந்துகிறார். “எங்க அப்பா என்னையும் அடிப்பார்.. எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மத்தவங்களையும் அடிப்பார்” என்று கவின் இயல்பாக செல்லும் காட்சி அமர்க்களம்.

நயன்தாரா சிறுவயதாக இருக்கும் போது ஓடிப்போன அவரது தாயார் பல ஆண்டுகளுக்கு பின் திரும்பி வரும் காட்சி திரையரங்குகளில் சிரிப்பையும் ஏற்படுத்துவதுடன் படத்துக்கு நெருடலாகவும் இருக்கிறது.

சீரியஸான கதையை சிரிப்பு கமழும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் அறிமுக இயக்குனர் விஷ்ணு எவன் முதல் படத்திலேயே ஜெயித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்மை மறந்து சிரித்து மகிழத்தக்க நல்லதொரு பொழுதுபோக்கு படம் ஹாய்.