பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் அனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி, ‘A Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளார். பல சர்வதேச திரை விழாக்களில் இக்குறும்படம் பங்கேற்க்கவுள்ளது.
இது குறித்து குணாநிதி பேசுகையில், ” சிறு வயதிலிருந்தே நடிப்பு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது. ‘Theatre lad’ சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘A Stroke Of Dissonance’ ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட முப்பது நிமிட குறும்படம். சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு போராடும் வயலின் கலைஞனை பற்றிய ஒரு திரில்லர் கதை இது. இந்த கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம் நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன். எனது நடிப்பார்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர். எனது நடிப்பார்வத்தை பார்த்த எனது தாத்தா தான் நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார். சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் சினிமாவின் கால்பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்” என்றார் குணாநிதி. இப்படத்தை மறைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ‘ராம்போ’ ராஜ்குமாரின் மகன் ‘ராம்போ’ வெங்கட் இயக்கியுள்ளார்.