![]()

போகுமிடம் வெகு தூரமில்லை _ விமர்சனம்
அடுத்தவருக்கு உதவுவதே உன்னதமான வாழ்க்கை என்பதை உள்ளம் நெகிழச்சொல்லும் படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை
மனைவியை பிரசவத்துக்காக, மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குழந்தையின் பிறப்புக்காக திக் திக் என்ற மனநிலையுடன் காத்திருக்கிறார் விமல்.
இந்நிலையில், பிரசவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை யாருக்கோ உதவியாக மனைவி கொடுத்ததும், பணம் வாங்கியவர் உரிய நேரத்தில் திரும்பக் கொடுக்காததும் அவருக்குத் தெரிய வருகிறது. அதிர்ந்து போகிறார் விமல்.
அமரர் ஊர்தி ஓட்டுநரான அவருக்கு, சென்னையில் இருந்து ஓர் உடலை, நெல்லைக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. பணம் கிடைக்குமே என்று ஒப்புக்கொள்கிறார்.
இறந்து போனவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இரண்டாவது மனைவியின் மகன் பவன். இவர்களுக்குள், தந்தையான் உடலுக்கு யார் இறுதிச் சடங்கு செய்வது என்பதில் மோதல்.
இதற்கிடையே திருநெல்வேலிக்கு உடலை கொண்டு செல்லும் விமல், வழியில் கருணாஸை சந்திக்கிறார். கருணாஸால் விமலுக்கு பல்வேறு தொல்லைகள்.
தவிர, காதல் ஜோடி ஒன்றும் அமரர் ஊர்தியில் அடைக்கலம் தேடி, ஏறுகிறது.
அதன் பிறகு நடக்கும் பகீர் திருப்பங்களே, மீதிக்கதை.
சமீப வருடங்களாக, படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் விமல். அந்த வரிசையில், இதுவும் முத்தான படம். வசனம் அதிகமில்லை… உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து இருக்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகன் என்றே கருணாஸை சொல்லலாம். சிரிப்பையும் பரிதாபத்தையும் மாறி மாறி வழங்குகிறார். இறுதியில் நெகிழ வைக்கிறார்.
தவிர, ஆடுகளம் நரேன் பவன், அருள் தாஸ், மனோஜ் குமார், தீபா சங்கர், வேலராம மூர்த்தி உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு அற்புதம். பெரும்பாலும் வாகனம், சாலை என்று இருந்தாலும் பல்வேறு கோணங்களில் அளித்து ரசிக்க வைக்கிறார்.
ரகுநந்தன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆனால் பின்னணி இசை மிகச் சிறப்பு.
ஆரம்பத்தில் படம், இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி ஒரு வாகனத்துக்குள்ளேயே நகர்கிறது. அதன் பிறகும் சில கதாபாத்திரங்கள்தான். ஆனால் ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
மதிப்பெண் 4/5

